சாதாரண உடலுறவு ஆணுக்கு.. பழமைவாத மனநிலை? திருமண வழக்குகளில் பொய்யான வாக்குறுதி: உச்சநீதிமன்றம் வேதனை
டெல்லி: இளம்பெண் ஒருவர், இளைஞரை காதலித்துள்ளார்.. ஒருகட்டத்தில் இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். ஆனால், திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவை துண்டித்து கொண்டுவிட்டாராம் அந்த இளைஞர். இதனால் பாதிக்கப்பட்ட பெண் நீதிமன்றம் படியேறினார்.. தன்னை ஏமாற்றி மோசம் செய்த காதலனுக்கு தண்டனை தரும்படியும் நீதிமன்றத்தில் கோரினார். தன்மீதான வழக்கை ரத்து செய்யும்படி, அந்த காதலனும் பதில் மனு தாக்கல் செய்தார்.. இதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தந்த உத்தரவு என்ன?
காதலித்த பெண், தன்னுடைய காதலன் மீதான பலாத்கார வழக்கை, உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.. திருமண உறுதி அளித்ததாலேயே, தான் அவருடன் உறவு கொண்டதாகவும், இப்போது ஏமாற்றியதால் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் தண்டனை அளிக்கும்படியும் மனுவில் கோரி இருந்தார்..

உச்சநீதிமன்றத்தில் அப்பீல்
ஆனால், இந்த மனுவை ஹைகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. அதனால், உச்சநீதிமன்றத்தில் அந்த பெண் அப்பீல் செய்தார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுந்தரேஷ், ராஜேஷ் பிந்தால் அமர்வு முன்பு இந்த மனுவானது விசாரணைக்கு வந்தது..
அப்போது நீதிபதிகள் சொன்னதாவது: "இன்றைய ஒழுக்க நடைமுறைகளே வித்தியாசமாகி விட்டது. முறிந்து போகும் உறவை அந்தப் பெண் ஏற்றாரா? தோல்வியடையும் காதல் உறவில், 2 தரப்பினருமே பாலியல் உறவை கட்டாயப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
"நீ ஒரு மேஜர்... உன்னை திருமணம் செய்து கொள்வேன்" என்று நம்பி ஏமாற்றப்பட்டிருக்க முடியாது. ஒழுக்கம், நல்லொழுக்கம் போன்றவை எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு வித்தியாசமாக தெரிகிறது.
முறிபடும் காதல்கள்
நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக்கொண்டால், கல்லூரியில் மாணவர், மாணவி இடையிலான எந்தவொரு உறவும் கூட தண்டனைக்குரியதாகி விடும்... காதலை முறித்துக் கொள்ள முடியும் எனும் போது உடலுறவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இங்கு பெரும்பாலும் பழமைவாத மனநிலைதான் முக்கிய பங்கு வகிக்கிறது, பழமைவாத ஒழுக்க அமைப்பின் குறைபாடு காரணமாக, இதுபோன்ற புகார்களில் ஆண் மீது மட்டுமே பழி சுமத்தப்படுகிறது. ஆண் மட்டுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்பது போன்று, நம்முடைய அமைப்பில் இடைவெளிகள் உள்ளன. சில சமயங்களில், ஒரு பெண் தன்னுடைய மாமியார் மீதும் பல வழக்குகளைப் பதிவு செய்கிறாள்.. எந்தவொரு தோல்வியுறும் காதலும் இந்த அளவுக்கு தண்டிக்கப்பட முடியுமா?" என்றனர் நீதிபதிகள்.
சாதாரண உடலுறவு
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மாதவி திவான், ''இது ஒரு காதல் உறவு இல்லை. காதல் தன்மை கொண்டதல்ல.. எனவேதான் முறிந்து விட்டது. இது ஏற்பாடு செய்யப்பட்ட உறவு. இந்த விஷயத்தில் பெண்ணின் சம்மதத்தை, சுதந்திரமான சம்மதம் என கூற முடியாது. உடன்படாவிட்டால் தன்னை திருமணம் செய்ய மாட்டார் என பெண் நம்பினாள். ஆணுக்கு சாதாரண உடலுறவாக இருக்கலாம். பெண்ணுக்கு அப்படி கிடையாது'' என்றார்.
வழக்கு ஒத்தி வைப்பு
இதையடுத்து, நீதிபதி சுந்தரேஷ், "இந்த சூழ்நிலையை பாலின தொடர்பின்றி, 2 தரப்பு கண்ணோட்டத்தில் ஆராய வேண்டும். என் மகள் இந்த நிலையில் இருந்தாலும் கூட, நான் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.
இந்த விஷயத்தில், இவ்வளவு பலவீனமான விஷயங்களைக் கொண்டு பாலியல் வன்கொடுமைக்கான தண்டனையை அளிக்க முடியுமா? ஆனால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டவள்" என்று திட்டவட்டமாக நீதிபதிகள் கூறினார்கள். அத்துடன் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய இளைஞரின் மனு மீது தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டி இருப்பதாக கூறி வழக்கையும் ஒத்திவைத்துள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருவது குறித்தும், திருமண வாக்குறுதிகள் நிறைவேறாததால் ஏற்படும் பாலியல் வன்கொடுமை வழக்குகள் குறித்தும் சுப்ரீம் கோர்ட் கவலை வெளியிட்டுள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications