எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக புது அஸ்திரம்.. உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு!
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, திண்டுக்கல்லைச் சேர்ந்த எஸ். சூர்யமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். கட்சியின் பொதுக்குழுவால் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பதிலாக அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும் என அவர் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே, சூர்யமூர்த்தி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் தற்போது உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்த மேல்முறையீடு, அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு எதிரான சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக அமைந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்தத் தேர்வு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சூர்யமூர்த்தி ஆகியோர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
அதிமுக உறுப்பினரான திண்டுக்கல் சூர்யமூர்த்தி, பொதுச் செயலாளர் பதவிக்கு அடிப்படை உறுப்பினர்கள் மூலம்தான் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வாதிட்டு, இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராக உரிமையியல் வழக்கை தொடர்ந்தார். இது கட்சி விதிகள் மீறல் என அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, சூர்யமூர்த்தியின் வழக்கை தள்ளுபடி செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இருப்பினும், சென்னை உரிமையியல் நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் அந்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கடந்த செப்டம்பர் மாதம் வெளியான தீர்ப்பில், உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமியின் வாதங்களை ஏற்றுக்கொண்டது. உரிமையியல் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், சூர்யமூர்த்தி தாக்கல் செய்த வழக்கையும் நிராகரித்தது.
இதன் மூலம், சூர்யமூர்த்தியின் உரிமையியல் வழக்கு உயர்நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டது. இந்த பின்னணியில்தான், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வானதை எதிர்த்து சூர்யமூர்த்தி தற்போது உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications