காங். லோக் சபா உறுப்பினர்கள் இடைநீக்கம்.. ஜனநாயகத்திற்கு எதிரானது.. டி.ஆர்.பாலு கண்டனம்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு லோக் சபா உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இருந்தே விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக லோக் சபா மற்றும் ராஜ்ய சபா முடங்கியது.
இந்த நிலையில் இன்று மீண்டும் லோக் சபா கூட்டம் தொடங்கியது. அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்து கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மதியம் 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

காங். உறுப்பினர்கள் இடைநீக்கம்
பின்னர் மதியம் 3 மணிக்கு மீண்டும் அவை கூடிய போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டனர். இதனால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ் மற்றும் டி.என்.பிரதாபன் ஆகிய 4 பேரும் அவை நடவடிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

டி.ஆர்.பாலு கண்டனம்
இதற்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து டி.ஆர்.பாலு கூறுகையில், எதிர்க்கட்சிகள் அவையில் போராட்டத்தில் ஈடுபடுவது சாதாரண விஷயம். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது பாஜகவினரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முறையான அறிவுறுத்தல்களை மட்டுமே வெளியிட வேண்டும்.

ஜனநாயகத்திற்கு விரோதம்
லோக் சபா உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதன் மூலம், கட்டுப்பாடாக அவையை நடத்த முடியவில்லை என்பதையே காட்டுகிறது. அதுமட்டுமல்லாமல், பாஜக ஆட்சியமைத்த பின்னர் தான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுகின்றனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்படுவது ஜனநாயகத்திற்கு எதிரானது.

நடவடிக்கை பற்றி கருத்து
இதற்கு சபாநாயகர் நேரடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை. ஆனால் நாடாளுமன்ற விவகாரத்துறையின் பரிந்துரையின் பேரில் சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இதனை திரும்பப் பெற வேண்டும். காங்கிரஸ் எம்பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவாதிக்க மறுப்பு
மக்களை பாதிக்கும் விவகாரங்கள் குறித்து பாஜக தொடர்ந்து பேச மறுத்து வருகிறது. விலைவாசி உயர்வு பற்றி விவாதம் நடத்த இந்த வாரம் நேரம் ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் இதுவரை எடுக்கவில்லை. நிதியமைச்சர் தான் வந்து விவாதம் நடத்த வேண்டும் என்று இல்லை. மத்திய அமைச்சர் யார் வேண்டும் என்றாலும் பதில் கூறலாம். எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை சுதந்திரமான மற்றும் உண்மையான விவாதம் நடத்தவில்லை என்பதே பிரச்னையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications