தைவான் தமிழ்ச் சங்கம் சார்பில் பொங்கல் திருவிழா! 14 ஆண்டுகளாக கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியம்!
டெல்லி: தைவான் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் இந்த ஆண்டு பொங்கல் திருவிழா, தைபே நகரில் உள்ள செங் யுங் ஃபா பவுண்டேசன் உள்ளரங்க அரங்கில் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.
தமிழ்ச் சங்கம் சார்பில் 14ஆம் ஆண்டு பொங்கல் விழாவாகக் கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சுமார் 300 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். சங்கத்தின் துணைத் தலைவர் ரமேஷ் பரமசிவம் , விழாவில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களையும் பார்வையாளர்களையும் வரவேற்று உரையாற்றினார்.

தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் யூசி, இந்திய தைபே அசோசியேசனின் துணைப் பொது இயக்குநர் விநாயக் சவான், விஸ்ட்ரான் ஐடி சேவை நிறுவனத்தின் துணைத் தலைவர் கார்த்திகேயன் மாதவன், தைவான் தமிழ்ச்சங்க துணைத்தலைவர் ரமேஷ் பரமசிவம், பொதுச் செயலாளர் முனைவர் ஆ.கு. பிரசன்னன் மற்றும் துணைப் பொதுச் செயலாளர் திரு. சு. பொன்முகுந்தன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கேற்றி பொங்கல் விழாவை தொடங்கி வைத்தனர்.
மேலும் தமிழரின் பாரம்பரியத்துக்கும் பண்பாட்டுக்கும் மரியாதையும் செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்கள் பொங்கல் வாழ்த்துரைகளை வழங்கி விழாவை சிறப்பித்தனர்.

கலாச்சார நிகழ்ச்சிகள்
தமிழ்ச் சங்கத்தின் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் இந்த ஆண்டும் சிறப்பாக நடைபெற்றன. பரதநாட்டியமும் ஒடிசி நடனமும் மேடையை அலங்கரித்தன. தொடர்ந்து குழந்தைகளின் இனிமையான நடனங்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. இதனுடன் ஸ்பானிஷ் ஃபிளமிங்கோ நடனமும் பாடல் நிகழ்ச்சிகளும் இடம்பெற்று விழாவுக்கு சர்வதேச பன்முகத் தன்மையை சேர்த்தன. சிறுவர்களின் பாரம்பரிய ஆடை அணிவகுப்பும் அனைவரின் பாராட்டைப் பெற்றது.

சிறுவர் ஓவியக் கண்காட்சி
வருடந்தோறும் நடைபெறும் சிறுவர் ஓவியக் கண்காட்சி இந்த ஆண்டும் காணொளி வடிவில் திரையிடப்பட்டது. இதில் பங்கேற்ற 22 சிறுவர்களுக்கும் பாராட்டுச் சின்னங்களும் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது.

பன்முக கலாச்சார பார்வையாளர்கள்:
இந்த ஆண்டின் விழாவை இன்னும் பிரத்தியேகமாக்கியது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விருந்தினர்கள் அளித்த பங்கேற்பும் பங்களிப்பும். அவர்கள் பார்வையாளர்களாக மட்டுமல்லாது, கலைஞர்களாகவும் மேடையை சிறப்பித்தனர்.
இத்தகைய பன்முகத் தன்மை, தைவான் தமிழ்ச்சங்கம் இந்தியா-தைவான் கலாச்சார பாலமாக விளங்குவதற்கான உறுதியான சான்றாய் திகழ்கிறது. தொகுப்பாளர்களாக கிரன் கேசவன், அருண், ரெனி அஜாய் ஆகியோர் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் இனிமையைப் பரிமாறும் பாலங்களாக இருந்து நிகழ்வை நடத்தினர்.

அறுசுவை விருந்து - நிறைவு நிகழ்ச்சி
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாரம்பரிய அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் சு. பொன்முகுந்தன் மற்றும் பொருளாளர் தங்கராசு அரிச்சந்திரன் ஆகியோர் விழா ஒருங்கிணைப்பை சிறப்பாக மேற்கொண்டனர்.

தமிழ்ச் சங்க பொருளாளர் ராஜமோகன் நன்றி உரையாற்றினார். நாட்டுப் பண்ணின் இனிமை முழங்க விழா மகிழ்வோடு நிறைவடைந்தது.












Click it and Unblock the Notifications