ராணுவ வீரர் பிரபு கொலை.. விடாத அண்ணாமலை.. இன்றே டெல்லிக்கு பறக்க முடிவு.. முக்கிய "அசைன்மென்ட்"!
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதாக அண்ணாமலை புகார் அளிக்க உள்ளார்.
டெல்லி: பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த வேலம்பட்டி எம்ஜிஆர்நகரில் ஏற்பட்ட பிரச்சனையில் ராணுவ வீரர் பிரபு கொலை செய்யப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
பிரபுவின் குடும்பத்துக்கும் அதேபகுதியை சேர்ந்த திமுக பேரூராட்சி கவுன்சிலர் சின்னசாமிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனை மிகப்பெரிய மோதலாக மாறி உள்ளது.

கொலை
இந்த பிரச்சனையில் சின்னசாமி உள்பட சிலர் பிரபு உள்பட அவரது குடும்பத்தினரை தாக்கினர். இவர்கள் குடும்பத்திற்கு இடையே பல காலமாக பிரச்சனை இருந்துள்ளது. குடும்ப ரீதியாக இருவருக்கும் இடையே சண்டை இருந்து வந்துள்ளது. இதுதான் சமீபத்தில் சண்டையாக மாறி உள்ளது. பல வருட குடும்ப பகைதான் இந்த மோதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பிரபு சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி இறந்தார். இதில் போலீசாரும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர்.

நடவடிக்கை
துரிதமாக செயல்பட்ட போலீசார் இதில் தொடர்புடைய எல்லோரையும் கைது செய்தனர். கவுன்சிலர் சின்னசாமி, குருசூர்யமூர்த்தி, குணாநிதி, ராஜபாண்டி, மணிகண்டன், மாதையன், புலிபாண்டி, வேடியப்பன், காளியப்பன், உள்ளிட்டர்வகளை கைது செய்தனர். இது தொடர்பாக இணையத்தில் பல்வேறு தரப்பினர் பொய்யான புகார்களை, வதந்திகளை பரப்பி வந்தனர். இதையடுத்து இந்த மரணம் தொடர்பாக பொய்யான தகவல்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி எச்சரிக்கை விடுத்தார்.

டெல்லி
இந்த நிலையில்தான் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்திக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. கிருஷ்ணகிரியில் ராணுவ வீரர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக நேரில் புகார் அளிக்க திட்டம் போட்டுள்ளார். அதோடு தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுள்ளதாக புகார் அளிக்க உள்ளார். தமிழ்நாட்டில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனைகளை பட்டியலிட்டு அவர் இந்த புகாரை அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக உள்துறை அமைச்சரிடம் அண்ணாமலை நேரம் கேட்டுள்ளார்.

போராட்டம்
இந்த கொலைக்கு பின் அரசியல் காரணங்கள் இல்லை. இது குடும்ப பிரச்சனை என்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ள நிலையில்தான் அண்ணாமலை இந்த புகாரை உள்துறை அமைச்சகத்திற்கு கொண்டு செல்கிறார். நேற்றுதான் சென்னை சேப்பாக்கத்தில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை மற்றும் ராணுவ வீரர் பிரபு கொலையை கண்டித்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து அண்ணாமலை சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமும் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து ஆளுநர் ஆர் . என் ரவியுடனும் அண்ணாமலை சந்திப்பு நடத்தினார்.
தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் -ஒழுங்கு பிரச்சனை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ராணுவ வீரர் பிரபு கொலை தொடர்பாகவும் ஆளுநரிடம் அண்ணாமலை புகார் கொடுத்தார். இது ஒரு தீவிரமான விஷயம், இது தொடர்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் எங்களிடம் புகார் கொடுத்துள்ளனர் என்று ஆளுநர் மாளிகை சார்பாகவும் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications