டெல்லியில் அண்ணா-கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார் மு.க ஸ்டாலின்.. சோனியா காந்தி பங்கேற்பு
டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார்.
டெல்லி: டெல்லியில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைத்தார். கோலாகலமாக நடைபெறும் திறப்பு விழாவில், மத்திய அமைச்சர்கள், சோனியாகாந்தி, ராகுல்காந்தி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கடந்த 2006ஆம் ஆண்டு நாடாளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்.பி.க்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 சதுரமீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது.
அந்த வகையில், 2013ஆம் ஆண்டில் திமுகவுக்கு, டெல்லியில் உள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் பாஜக அலுவலகம் அருகில் நிலம் வழங்கப்பட்டது. பின்னர், இங்கு திமுக அலுவலகமான அண்ணா - கலைஞர் அறிவாலயம் கட்டும் பணிகள் தொடங்கின.

டெல்லி திமுக அலுவலகம்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின், கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன் விரைவில் பணிகளை முடிக்கவும் அறிவுறுத்தினார். அதன்படி பணிகள் கடந்த டிசம்பரில் முடிவுற்றன. கடந்த ஜனவரியில் கட்டிடத்தை திறக்க முடிவெடுக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் அதிகரித்ததால் திறக்கப்படவில்லை.

திமுக அலுவலகம் திறப்பு
டெல்லி அரசியலின் மையப்புள்ளியாக மாற உள்ள கட்டிடம் இன்று திறக்கப்பட்டது. பிரமாண்ட தூண்கள், அழகிய வடிவமைப்பு என அழகு மாளிகையாக இது உருவெடுத்துள்ளது. அனைத்து நவீன வசதிகளுடன் கூடியதாக அண்ணா கலைஞர் அறிவாலயத்தை திமுக கட்டியுள்ளது. இந்த கட்டடத்தின் முன் பகுதியில் அண்ணா, கருணாநிதி ஆகியோரது சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. மேலும் திமுக கொடி பறக்கும் வகையில் கொடி கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிரமாண்ட அறிவாலயத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கொடி கம்பத்தில் திமுக கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதை தொடர்ந்து அண்ணா- கலைஞர் அறிவாலயத்தை திறந்து வைத்தார்.

அண்ணா, கருணாநிதி சிலைகள் திறப்பு
பின்னர் கட்டிடத்தின் முன்பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும், கலைஞர் கருணாநிதியின் சிலையை கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவும் திறந்து வைத்தனர். பின்னர் முரசொலி மாறன் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, சோனியா காந்தி குத்துவிளக்கு ஏற்றினார். அப்போது, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் எழுதிய ''கருணாநிதி ஏ லைஃப்'' என்ற நூலை இந்து என்.ராம் வெளியிட சோனியா காந்தி பெற்றுக் கொள்கிறார். பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுதிய ''ஏ திராவிடன் ஜார்னி'' என்ற நூலை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பெற்றுக் கொண்டார்.

விழாக்கோலம்
கட்டிடத்தின் 3வது தளத்தில் அமைக்கப்பட்டுள்ள பேராசிரியர் அன்பழகன் பெயரிலான நூலகத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். இதை தொடர்ந்து விழாவில் கலந்து கொள்ளும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தேநீர் விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சி திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையிலும், பொருளாளர் டி.ஆர்.பாலு எம்பி முன்னிலையிலும் நடைபெறுகிறது. அண்ணா- கலைஞர் அறிவாலய திறப்பு விழா நிகழ்ச்சியால், இந்த கட்டிடம் அமைந்துள்ள தீன்தயாள் மார்க் பகுதியே விழாக் கோலம் பூண்டுள்ளது












Click it and Unblock the Notifications