வட இந்தியாவை விட பெஸ்ட்.. வறுமை குறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு.. நிதி ஆயோக் அறிக்கை!
டெல்லி: இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்கள் குறித்து நாடு முழுவதும் நிதி ஆயோக் ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. நிதி ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீடு (எம்.பி.ஐ) அறிக்கையின்படி நாட்டில் அதிக ஏழைகள் மிகுந்த மாநிலங்களில் பீகார் முதலிடத்தில் உள்ளது.
ஜார்க்கண்ட் இரண்டாம் இடத்திலும், உத்தரப்பிரதேச மாநிலம் மூன்றாவது இடத்திலும் உள்ளன. மத்தியப் பிரதேசம் 4-வது இடத்திலும், மேகாலயா 5-வது இடத்திலும் உள்ளன. பீகாரில் 51.91 சதவீத ஏழைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் 37.79% ஏழைகள்
ஜார்கண்டில் 42.16% ஏழைகள், உத்தரப்பிரதேசத்தில் 37.79% ஏழைகள், மத்தியப் பிரதேசத்தில் 36.65% ஏழைகள் மற்றும் மேகாலயாவில் 32.67% ஏழைகளும் உள்ளதாக நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் பேர் வசிக்கும் மாநிலங்கள் பட்டியலிலும் பீகார்தான் முதலிடம் பெற்றுள்ளது. ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இருக்கிறனர்.

தமிழகம், கேரளா
அதே வேளையில் நாட்டில் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் 0.71 சதவீதம் ஏழைகளே உள்ளனர் என்று கூறுகிறது நிதி ஆயோக் அறிக்கை. இதேபோல் நமது தமிழகத்திலும் 4.89 சதவீதம் ஏழைகள் மட்டுமே உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரத்துறைகளில் தரம்
இந்த பட்டியலில் கேரளாவை விட தமிழகம் பின்தங்கிய நிலையில் இருந்தாலும் இந்தியாவின் கடைக்கோடி மாநிலங்களான தமிழகமும், கேரளாவும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்துள்ளது இந்த மாநிலங்களின் வளர்ச்சியையே காட்டுகிறது. பொதுவாக கல்வி, சுகாதாரத்துறைகளில் தமிழகமும், கேரளாவும் நல்ல தரமான கட்டமைப்புகளை கொண்டுள்ளன.

பாதுகாப்பு நிறைந்த மாநிலங்கள்
தமிழகத்தை பொறுத்தவரை இங்கு வடமாநிலங்களை விட குக்கிராமம் முதல் மருத்துவ கட்டமைப்புகள், கல்வியின் தரம் மிகச்சிறப்பாக உள்ளது. அதுவும் கேரளாவை விட ஏராளமான வேலைவாய்ப்புகள் நிறைந்த தொழில்துறை மாநிலமாகவும் தமிழகம் உள்ளது. வடமாநிலங்களை விட தமிழகமும், கேரளாவும் எப்போதும் அதிக பாதுகாப்பு உள்ள மாநிலங்ககளாக உள்ளன. இத்தகைய கட்டமைப்புகள் உள்ளதால்தான் இந்த இரண்டு மாநிலங்களும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்துள்ளன.












Click it and Unblock the Notifications