நாட்டிலேயே அதிக சாலை விபத்து தமிழகத்தில் நடக்கிறது.. உயிரிழப்பிலும் 2வது இடம்! மத்திய அரசின் டேட்டா
டெல்லி: இந்தியாவில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பகிர்ந்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் தான் 1,97,97 விபத்துக்கள் நடந்துள்ளது. சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் பட்டியலில் உத்தரபிரதேசத்துக்கு அடுத்த படியாக தமிழகம் தான் உள்ளது. தமிழகத்தில் 1,65,847 பேர் மரணம் அடைந்து உள்ளனர்.
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால், சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே உள்ளது. அதிலும் போக்குவரத்து விதி மீறல்கள் அதிக அளவில் நடைபெறுவதால் விபத்துக்கள் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது.

அதிக விபத்துகள்: இந்தியாவில் நடைபெற்ற விபத்துக்கள் மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் பகிர்ந்தார். அவர் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, 2021-ம் ஆண்டு முதல் கடந்த 9 ஆம் தேதி வரை மொத்தம் 14,10,590 விபத்துகள் நடந்துள்ளன. நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில்தான் 1,97,97 விபத்துக்கள் நடந்துள்ளது.
இரண்டாவது இடத்தில், மத்திய பிரதேசம் உள்ளது. இந்த மாநிலத்தில், 1,81,479 விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. உத்தர பிரதேசத்தில் 1,50,107 விபத்துகளும் நடந்து இருக்கின்றன. அதாவது சராசரியாக தமிழகத்தில் தினமும் 141 விபத்துகளும், மத்திய பிரதேசத்தில் 131 விபத்துகளும், உத்தரபிரதேசத்தில் 108 விபத்துகளும் நடக்கின்றன.
நிதின் கட்கரி வருத்தம்: இது பற்றி நாடாளுமன்றத்தில் கவலை தெரிவித்த நிதின் கட்கரி கூறியதாவது:- சாலை விபத்துகளை 50 சதவீதம் அளவுக்கு குறைக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை இலக்கு வைத்திருந்தது. ஆனால் அதில் நான் தோல்வி அடைந்து விட்டேன் என்று சொல்வதில் தயக்கமில்லை. நமது நாட்டில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவதில்லை. போக்குவரத்து விதிகளை பற்றி கவலைப்படாமல் வாகனங்களை இயக்குகிறார்கள்.
அதிக உயிரிழப்புகள்: சாலைகளில் ஆங்காங்கே லாரிகளை நிறுத்தி விபத்துகளை ஏற்படுத்துகிறார்கள். சட்டத்தின் மீது மக்களுக்கு மரியாதை மற்றும் பயம் இல்லாததால்தான் இந்த விபத்துகள் நடக்கின்றன" என்றார். அதேபோல, கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்தோர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி மொத்தம் 15,2,416 பேர் உயிரிழந்து உள்ளனர்.
விபத்து எப்படி நடந்தது?: அதில் நாட்டிலேயே மிக அதிகமாக உத்தரபிரதேசத்தில் 1,97,283 பேர் உயிரிழந்து உள்ளனர். அடுத்தப்படியாக தமிழகத்தில் 1,65,847 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இந்த பட்டியலில் 3-வது இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது. அங்கு 1, 30,613 பேர் உயிரிழந்து உள்ளனர். அதேபோல் 2019-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை நாட்டில் சாலை விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் பற்றியும் விபத்து எப்படி நடந்தது என்பது பற்றியும் தகவலும் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
"சாலைகளில் நடந்து சென்றவர்கள் 1,11,284 பேரும், சைக்கிளில் சென்றவர்கள் 18,050 பேரும், பைக்கில் சென்றவர்கள் 2,57,450 பேரும், கார்-ஜீப் போன்ற வாகனங்களில் சென்றவர்கள் 82,301 பேரும், பேருந்து மற்றும் லாரிகளில் சென்றவர்கள் 43,411 பேரும் உயிரிழந்துள்ளனர்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications