ராம்சார் தளங்கள் பட்டியலில் தமிழ்நாட்டின் 15 பறவைகள் சரணாலயம்? லோக்சபாவில் மத்திய அரசு விளக்கம்!
டெல்லி: சர்வதேச முக்கியத்துவம் பெறக் கூடிய ஈர நில- சதுப்பு நிலங்கள் என வகைப்படுத்தப்படும் ராம்சார் தளங்களின் பட்டியலில் தமிழ்நாட்டின் 15 பறவைகள் சரணாலயம் இடம் பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் லோக்சபாவில் தெரிவித்தார். இதேபோல தொழில்துறை மேம்பாட்டு திட்டத்திற்கு தமிழ்நாட்டின் 32 ஐடிஐ-கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது தமிழ்நாடு தொடர்பாக தெரிவிக்கப்பட்ட விவரங்கள்:

மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் லோக்சபாவில் கூறியதாவது: பாரம்பரிய நடன வடிவங்கள், உள்நாட்டு கலைப்படைப்புகள் மற்றும் பிற பாரம்பரிய கலை வடிவங்கள் போன்ற பல்வேறு கலாச்சாரத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற இளம் கலைஞர்கள் அவர்களின் மேம்பட்ட பயிற்சியைப் பெறுவதற்காக 'பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கான உதவித்தொகை' என்ற பெயரில் நிதி மானியத் திட்டத்தை கலாச்சார அமைச்சகம் செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் மாதம் 5,000/- வீதம், அதிகபட்சம் 400 கலைஞர்களுக்கு நான்கு சமமான ஆறு மாத தவணைகளில், 02 வருட காலத்திற்கு வழங்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட கலைஞர்கள் 18 வயது முதல் 25 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் மற்றும் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஏதேனும் ஒரு குரு அல்லது நிறுவனத்தின் கீழ் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் முன் நேரில் நேர்காணல் / கலந்துரையாடலின் மூலம் சிறப்பாக செயல்பட்டதன் அடிப்படையில் கலைஞர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை, 'பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்' கீழ் தமிழ்நாட்டில் 9 கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 'பல்வேறு கலாச்சாரத் துறைகளில் இளம் கலைஞர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில்' தமிழ்நாட்டிற்கு ரூ.45.9 லட்சம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத் மத்திய இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் லோக்சபாவில் தெரிவித்த பதில்: கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ராம்சார் தளங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்ட தளங்களின் எண்ணிக்கை 40 ஆகும். இதில் தமிழ் நாட்டில் மட்டும் 15 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கூத்தங்குளம் பறவைகள் சரணாலயம், சித்திரங்குடி பறவைகள் சரணாலயம், காரிக்கிளி பறவைகள் சரணாலயம், பிச்சாவரம் அலையாத்தி காடுகள், பள்ளிக்கரணை சதுப்புநிலக் காப்புக் காடு, மன்னார் வளைகுடா கடர்சார் உயிர்க் கோளப்பகுதி, வெம்பன்னூர் ஈரநில வளாகம், வெள்ளோடு பறவைகள் சரணாலயம், உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம், சுசீந்திரம் தேரூர் ஈரநில வளாகம், வடுவூர் பறவைகள் சரணாலயம், காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயம், கரைவெட்டி பறவைகள் சரணாலயம், லாங்வுட்சோழா காப்புக்கூடு ஆகியவை இந்த 15 இடங்களாகும்.
மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சகத்தின் இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) ஜெயந்த் சவுத்ரி அளித்த பதில்: பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 71,000 பேர் பயிற்சி பெற்றுள்ளனர். திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி தலைமை இயக்குநரகம், உலக வங்கி உதவியுடன் மத்திய அரசின் திட்டமாக இருந்த தொழில்துறை மதிப்பு மேம்பாட்டிற்கான திறன்களை வலுப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்தியது. தொழிற்பயிற்சி நிலையங்கள், தொழிற்பழகுநர் பயிற்சிகள் மூலம் வழங்கப்படும் திறன் பயிற்சிகளின் பொருத்தம் மற்றும் திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் இத்தொழிற்பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் காலம் 2017-2024 (மே வரை) ஆகும்.
இத்திட்டத்தின் கீழ் 500 ஐடிஐ-கள் (இதில் 467 அரசு மற்றும் 33 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் அடங்கும்) ஆய்வகம், உபகரணங்கள் மற்றும் கருவிகளை மேம்படுத்துவதன் மூலம் பயிற்சியின் தொழில்துறை பொருத்தத்தை மேலும் மேம்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் தமிழ்நாட்டில் இருந்து 29 அரசு ஐடிஐகளும், 3 தனியார் ஐடிஐகளும், புதுச்சேரியில் இருந்து 2 அரசு ஐடிஐகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன












Click it and Unblock the Notifications