ஓபிசி மசோதா.. நூற்றாண்டு காயத்திற்கு சிறு மருந்து, கூட்டாட்சிக்கு கிடைத்த வெற்றி.. முதல்வர் பாராட்டு
டெல்லி: ஓபிசி பிரிவினரை வரையறுக்கும் உரிமையை மாநில அரசுகளுக்கு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது நூற்றாண்டு கால காயங்களுக்குச் சிறு மருந்தாகும் எனக் குறிப்பிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், இது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சமூக மற்றும் கல்வி ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் மொத்தம் 69% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல மத்திய அரசுப் பணியிடங்களிலும் 48.5% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.

ஓபிசி மசோதா
இந்நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப ஓபிசி வகுப்பினர் யார் என்பதை வரையறுக்க அந்தந்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் அளிக்கும் 127ஆவது சட்டத் திருத்த மசோதா நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் ஆகியவை காரணமாக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக முடக்கி வரும் நிலையிலும்கூட, இந்த மசோதா எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த ஆதரவுடனேயே நிறைவேறியது.

மாநிலங்களவை
மொத்தம் 386 மக்களவை உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இந்த மசோதா எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் நிறைவேறியது. இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நூற்றாண்டு கால காயங்களுக்குச் சிறு மருந்து
இந்நிலையில் தமிழ்நாடு முதல்வர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நூற்றாண்டு கால காயங்களுக்குச் சிறு மருந்தாகவும் சமூக நீதிக்கு அடித்தளமாகவும் அமைந்துள்ள இட ஒதுக்கீடு வரலாற்றில் இந்நாள் என்றும் நினைவுகூரப்படும். ஓபிசி பட்டியலை மாநிலங்களே தயாரிக்கும் ஓபிசி மசோதா நிறைவேறியிருப்பது கூட்டாட்சித் தத்துவத்திற்குக் கிடைத்த வெற்றி!" என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ஜோதிமணி
முன்னதாக மக்களவையில் இந்த மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய கரூர் எம்பி ஜோதிமணி, "அகில இந்திய அளவில் ஓபிசி இட ஒதுக்கீட்டிற்குத் தமிழ்நாடு எடுத்த முயற்சியே காரணம். மத்திய அரசுக்கு உண்மையாக ஓபிசி பிரிவினரின் மீது அக்கறை இருந்தால் 50% இட ஒதுக்கீட்டை நீக்கும் வகையில் மசோதாவை நிறைவேற்றட்டும்" என்றார். அவரது பேச்சைப் பலரும் பாராட்டியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் தொலைப்பேசியில் அழைத்து ஜோதிமணி எம்பியை வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications