இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு.. இரு நபர்களை இறக்கிவிட்டு பறந்த டாக்ஸி.. தீவிரமடையும் விசாரணை
டெல்லி: இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தின் அருகே இரண்டு நபர்களை டாக்ஸி ஒன்று இறக்கிவிட்டுச் செல்லும் சிசிடிவி காட்சிகளை தற்போது டெல்லி போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
டெல்லியிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தின் அருகே நேற்று மாலை திடீரென்று எல்இடி குண்டு ஒன்று வெடித்தது. நல்வாய்ப்பாக இந்த குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இஸ்ரேலுக்கும் இந்தியாவுக்கும் இடையே தூதரக உறவு தொடங்கப்பட்டு, நேற்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணையை டெல்லி போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். இன்று அதிகாலை குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்திற்கு விரைந்த டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவு, அங்கிருந்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

சிசிடிவி காட்சிகள்
அப்போது இஸ்ரேல் தூதரகம் அருகே இரண்டு நபர்களை டாக்ஸி ஒன்று இறக்கிவிட்டுச் செல்வதும், அந்த நபர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தை நோக்கி நடந்து செல்வதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. தற்போது அந்த டாக்ஸி டிரைவரை அடையாளம் காணும் முயற்சியில் டெல்லி போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேபோல அந்த இரண்டு நபர்களின் புகைப்படங்களை வெளியிடவும் டெல்லி போலீசார் தயாராகி வருகின்றனர். இந்தக் குண்டுவெடிப்பிற்கும் அவர்கள் இருவருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் வெளியாகவில்லை.

தியாகிகள்
மேலும், குண்டுவெடிப்பு நடைபெற்ற இடத்தில் டெல்லி போலீசார் கடிதம் ஒன்றைக் கைப்பற்றியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதல் வெறும் டிரைலர்தான் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானி மற்றும் அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிசாதே ஆகியோர் தியாகிகள் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் இருவருமே கடந்தாண்டு கொல்லப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

வெறும் டிரைலர்தான்
இந்தக் குண்டுவெடிப்பின் பின்னணியில் தீவிரவாதிகள் இருக்கலாம் என்றும் இதுபோன்ற ஒரு தாக்குதலை எதிர்பார்த்தே இருந்ததாகவும் இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் ரான் மல்கா தெரிவித்துள்ளார். மேலும், இந்த குண்டு வெடிப்பு குறித்து விசாரணை தற்போது நடைபெற்று வருவதாகவும் இதில் இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே முழு ஒத்துழைப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

பிரதமர் நிகழ்ச்சி
இந்தத் தாக்குதல் நடைபெற்ற இடத்திலிருந்து சுமார் 11.5 கிலோமீட்டர் தொலைவில்தான், குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் கலந்துகொண்ட முக்கிய நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இத்தாக்குதலுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலுள்ள வெளிநாட்டுத் தூதர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications