விவசாயிகளை விரட்டியடிக்கும் மத்திய அரசு.. டெல்லி எல்லையில் மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு வீச்சு
டெல்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளை உள்ளே நுழைய விடாமல் இன்று மீண்டும் கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் நடத்திய தொடர் போராட்டங்களை தொடர்ந்து மத்திய அரசு அந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற்றது. அத்துடன் பல்வேறு வாக்குறுதிகளையும் மத்திய அரசு வழங்கியது. ஆனால், இதுவரை அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்பது விவசாயிகள் தரப்பின் வாதம். இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் புகழ்பெற்ற முழக்கமான “டெல்லி சலோ” என்ற பெயரை மாபெரும் பேரணி மற்றும் போராட்டத்தை கடந்த வாரம் விவசாயிகள் தொடங்கினர்.

கிசான் மஜ்தூர் மோர்ச்சா, சம்யுக்தா கிசான் மோர்ச்சா உள்ளிட்ட 200 க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இதில் பங்கேற்பதற்காக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி நோக்கி புறப்பட்டனர். விவசாயிகளின் பல ஆண்டுகால கோரிக்கையாக இருந்து வரும் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என கோரிக்கை உட்பட 12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த பேரணி தொடங்கப்பட்டது.
வட மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உபி, ராஜஸ்தான், பீகார் மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லிக்கு டிராக்டரில் புறப்பட்டனர். பஞ்சாபில் இருந்து 2000 டிராக்டர், உத்தரப்பிரதேசத்தில் இருந்து 500 டிராக்டர், ராஜஸ்தானில் இருந்து 200 டிராக்டர்கள் என டெல்லி எல்லைகளை விவசாயிகள் சுற்றிவளைக்க முடிவு செய்தனர். வட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் மட்டுமின்றி கேரளா உள்ளிட்ட தென் மாநில விவசாயிகளும் இதில் பங்கேற்பதற்காக டெல்லிக்கு புறப்பட்டனர்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் நடத்தும் இந்த போராட்டம் ஆளும் பாஜக அரசுக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. எனவே இதனை தடுக்க பல்வேறு முயற்சிகளில் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. டிராக்டர்களில் டெல்லி நோக்கி செல்லும் விவசாயிகளை தடுப்பதற்காக, சாலைகளில் ஆணிகளை அறைந்தது காவல்துறை. முள் வேலி தடுப்பு, கான்கிரீட் தடுப்புகள் அமைத்து தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் காவல்துறை கலைக்க முயற்சித்தது.
ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறுவதில் முனைப்பு காட்டி வருகிறார்கள். இன்றும் புல்டோசர்களுடன் டெல்லி நோக்கி வந்த விவசாயிகள் தடுப்புகளை தகர்த்து எறிந்துவிட்டு செல்ல முயற்பட்டனர். அப்போது மீண்டும் அவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications