குஜராத் கலவரம்: டீஸ்டா செதல்வாடுக்கு ஜாமீன் மறுத்த குஜராத் ஹைகோர்ட் உத்தரவு உச்சநீதிமன்றத்தில் ரத்து
டெல்லி: குஜராத் கலவரம் தொடர்பாக போலி ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கிய வழக்கில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட டீஸ்டா செதல்வாட் தற்போது ஜாமீனில் வெளியில் இருக்கிறார். இந்நிலையில், இந்த ஜாமீனை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதனை எதிர்த்து டீஸ்டா உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் கலவரத்தை உருவாக்கியது. இக்கலவரத்தில் காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரி உட்பட பலர் கொல்லப்பட்டனர். கலவரம் தொடர்பாக வழக்கு விசாரணை தொடங்கியது. விசாரணையில் அப்போதைய குஜராத் முதல்வரும், தற்போதைய பிரதமருமான நரேந்திர மோடி மீதும் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்டு விசாரிக்கையில் நரேந்திர மோடி உள்ளிட்டோர் குற்றமற்றவர் என்று கூறி வழக்கிலிருந்து அவர்களை விடுவித்தது. இதனையடுத்து கலவரத்தில் உயிரிழந்த காங்கிரஸ் எம்பி ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரியும் சமூக செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் இருவரும் உச்சநீதிமன்றத்தை நாடினர். நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த இவ்வழக்கில் நரேந்திர மோடி உள்ளிட்டோரை விடுவித்தது சரி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனையடுத்து குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக டீஸ்டா செதல்வாட் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பட் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, மூவரும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 25ஆம் தேதி கைது செய்யப்பட்டார்கள். விசாரணையில், இந்த கலவரம் குறித்து மாநில அரசு மீது அவதூறுகளை பரப்ப அரசியல்வாதியும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மறைந்த அகமது படேலிடம் இருந்து செதல்வாட் ரூ.30 லட்சம் பெற்றது தெரிய வந்துள்ளதாக மாநில அரசு கூறியது.
ஆயினும் டீஸ்டா செதல்வாட் கைது நடவடிக்கை நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இதர ஜனநாயக கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைகள் ஆணையத் தலைவரும் டீஸ்டா செதல்வாட் கைதுக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி டீஸ்டா உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த செப்டம்பரில் அவருக்கு ஜாமீன் வழங்கியது. மேலும், இந்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற பரிசீலனைக்கே விட்டுவிட்டது. அதுவரை டீஸ்டா ஜாமீனில் இருக்கலாம் என்றும் கூறியிருந்தது. இந்த வழக்கு நீதிபதி நிர்சார் தேசாய் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையில், குஜராத் மாநில அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், டீஸ்டாவுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
டீஸ்டாவுக்கு ஜாமீன் வழங்கினால் அவர் வழக்கின் முக்கிய ஆதாரங்களை சிதைத்துவிடுவார் என்றும் குஜராத் அரசு தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இப்படியாக கடந்த மாதம் 21ம் தேதி விசாரணையை முடித்து, உத்தரவை ஜூலை 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இந்நிலையில் கடந்த 1ம் தேதி உத்தரவை வாசித்த நீதிபதி, டீஸ்டாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். மேலும், டீஸ்டா உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை 30 நாட்களுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்று டீஸ்டாவின் வழக்கறிஞர் மிஹிர் தாக்கூர் வலியுறுத்தியிருந்தார். ஆனால், நீதிமன்றம் இதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. எனவே உடனடியாக இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் டீஸ்டா தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனு இன்று நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் குஜராத் உயர்நீதிமன்றத்தின் அவதானிப்புகள் வக்கிரமானவை மற்றும் முரண்பாடானவை என்று கூறி டீஸ்டா செதல்வாட் ஜாமீனை உறுதி செய்தனர்.
அதேபோல டீஸ்டாவுக்கு வழங்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு நீடிக்கப்படும் என்றும், அவரது பாஸ்போர்ட் காவல்துறை வசம் இருக்கும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், டீஸ்டா செதல்வாட் சாட்சியங்களிடம் தொடர்பில் இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications