இந்திய விங் கமாண்டரின் உயிரை பறிந்த துபாய் ஏர் ஷோ! விபத்துக்கு காரணம் இதுதான்.. வெளியான புதிய வீடியோ
டெல்லி: துபாயில் நடந்த ஏர் ஷோவில் இந்திய விமானப்படையின் விங் கமாண்டர், நமன்ஷ் சியால் தேஜஸ் விமானத்தில் சாகசங்களை செய்துக்கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விபத்தின் கடைசி நிமிடம் பற்றிய வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவில் விபத்துக்கான காரணம் தெளிவாக தெரிவதாக தகவல் வெளியாகியுள்ளன.
நவம்பர் 21 ஆம் தேதி இந்த விபத்து நடந்தது. விபத்து தொடர்பான இரண்டு நிமிட வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவில் விங் கமாண்டர் பல்வேறு சாகசங்களை நிகழ்த்துவது தெளிவாக தெரிகிறது. இறுதியாக விமானம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து, மோதி வெடிக்கும் காட்சிகளும் பதிவாகியுள்ளன.

வீடியோவை பார்க்கும் போது குறைந்த உயரத்தில் விமானத்தை இயக்கியதால்தான் விபத்து ஏற்பட்டு இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். தேஜஸ் விமானம் இடது புறமாக சாய்ந்தவாறு சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தை நேராக நிமிர்த்த விமானி முயற்சித்த பொழுது போது போதுமான வேகம் கிடைக்காததால் விமானம் 'ஸ்டால்' எனும் நிலையை அடைந்தது. அதாவது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து புவி ஈர்ப்பு விசையின் காரணமாக கீழ்நோக்கிப் பாய்வதைதான் ஸ்டால் என்று சொல்வார்கள்.
போர் விமானங்களை இயக்கும் பொழுது அல்லது சாகசங்களில் ஈடுபடும் பொழுது, இந்த மாதிரியான நிலை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். இதிலிருந்து தப்பிக்க உடனடியாக விமானத்தின் இன்ஜினை முழு வேகத்தில் இயக்கி விமானத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டு வருவார்கள். முழு வேகத்தை எட்டும் பொழுதுதான் 6,500 கிலோ கொண்ட இந்த தேஜஸ் விமானம் மீண்டும் காற்றில் மிதக்கும்.
🚨 #tejascrashvideo A video has surfaced showing the aircraft's entire final demo flight, with the crash captured at the end of this 2-minute video.
— Vibhu (@vibhu_____) November 24, 2025
source: YouTube – wltan1791a#Tejas #DubaiAirshow #IAF #BreakingNews pic.twitter.com/PF5PxUweqH
ஆனால் விபத்து ஏற்பட்ட நிலையில் இரண்டு விஷயங்கள் முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டன. ஒன்று விமானம் பக்கவாட்டில் பூமியை நோக்கி பாய்ந்தது. இதனால் மிக வேகமாக கீழே விழுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்தது. அதேபோல விமானி போதுமான வேகத்தை கொடுப்பதற்குள் எந்த விபத்து ஏற்பட்டுவிட்டது.
ஒருவேளை உயரம் அதிகமானதாக இருந்திருந்தால், விமானம் பக்கவாட்டில் விழாமல் செங்குத்தாகவோ அல்லது பட்டையாகவோ கீழ்நோக்கி விழுந்திருக்கும். உயரம் அதிகமாக இருப்பதால், இந்த நிலைமையின் போது இன்ஜினின் வேகத்தை அதிகரித்து உடனடியாக விமானத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் போதுமான உயரம் இல்லாததால் விபத்து ஏற்பட்டிருக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications