சிஆர்பிஎப் வீரர் மகளுக்கு தாய் மாமாவாக வந்த ஓம் பிர்லா.. கொடுத்த மிகப்பெரிய பரிசு
டெல்லி: புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரர் மகளின் திருமணத்தை லோக்சபா சபாநாயகரும், கோட்டா தொகுதி எம்பியுமான ஓம் பிர்லா நடத்தி வைத்தார். ராஜஸ்தான் மாநில வழக்கப்படி, சகோதரியின் திருமணத்தின் போது தாய்மாமான் சீர் கொடுத்து வழி அனுப்புவது வழக்கம். சி.ஆர்.பி.எப். வீரர் மகளை தாய்மாமா ஸ்தானத்தில் இருந்து திருமணத்தை நடத்தியதுடன், தாய்மாமாக்கள் செய்வது போல் ஏராளமான சீர்வரிசைகளை அந்த பெண்ணுக்கு வழங்கி, தனது வாக்குறுதியை நிறைவேற்றினார்.
காஷ்மீரின் புல்வாமாவில் கடந்த 2019-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதல் நடந்தது. இதில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமணம் அடைந்தனர். இதில் கொல்லப்பட்ட 40 பேரில் ராஜஸ்தானின் கோட்டா மாவட்டத்தின் சங்கோட் கிராமத்தை சேர்ந்த ஹேம்ராஜும் ஒருவர் ஆவார்.

இந்நிலையில் கோட்டா தொகுதியின் எம்.பி.யும் லோக்சபா சபாநாயகருமான ஓம் பிர்லா, வீரமரணம் அடைந்த ஹேம்ராஜின் வீட்டுக்கு அப்போதே சென்று அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார். மேலும் அந்த குடும்பத்திடம் தொடர்பில் இருந்த அவர், சகோதரர் போல் வேண்டிய உதவிகளை செய்து வந்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ரக்ஷா பந்தன் பண்டிகையின்போது அவர்கள் வீட்டுக்கு சென்று பரிசு வழங்கி ஹேம்ராஜின் மனைவி மதுபாலாவுக்கு ஒரு சகோதரர் ஆகவே மாறியிருக்கிறார்.
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரை, அங்கு நடைபெறும் இந்து திருமணத்தில் மணப்பெண்ணின் தாய் மாமன் சீர்வரிசை வழங்கும் சடங்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் எப்படி மணப்பெண்ணின் தாய் மாமா சீர்வரிசைகளை வழங்குவாரோ அதுபோல் தான். அந்த வகையில் ஹேம்ராஜின் மகள் மீனாவுக்கு தாய்மாமா போல இருந்து திருமணத்தை நடத்தி வைப்பேன் என்று சபாநாயகர் ஓம் பிர்லா உறுதி அளித்து இருந்தார். தான் 2019ல் கொடுத்த வாக்குறுதியை தற்போது ஓம் பிர்லா நிறைவேற்றி உள்ளார்.
ஹேம்ராஜின் மகள் ரீனாவுக்கு நேற்று முன்தினம் மாலையில் வெகுவிமரிசையாக திருமணம் நடந்தது. அதில் தாய்மாமா போல ஏராளமான சீர்வரிசை வழங்கி, சடங்குகளை செய்து திருமணத்தை சபாநாயகர் ஓம் பிர்லா நடத்தி வைத்தார். அவருடன் ராஜஸ்தான் மாநில அமைச்சர் ஹீராலால் நாகரும் பங்கேற்றார். வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப். வீரரின் குடும்பத்துக்கு 6 ஆண்டுகளுக்கு முன்பு அளித்த வாக்குறுதியை ஓம் பிர்லா நிறைவேற்றி வைத்ததை உள்ளூர் மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.












Click it and Unblock the Notifications