அரசியல் விளம்பரம்? 10 நாள்.. ரூ.163.62 கோடி.. இல்லைனா க்ளோஸ்.. ஆம் ஆத்மி அரசுக்கு மத்திய அரசு செக்
டெல்லி: தங்களது கட்சி குறித்து மக்களிடையே விளம்பரம் செய்ய அரசாங்கத்தின் பணத்தை பயன்படுத்தியதாக டெல்லி ஆம் ஆத்மி அரசு மீது அதன் துணைநிலை ஆளுநர் தொடர்ந்து விமர்சனம் வைத்திருந்தார். இந்நிலையில், இவ்வாறு செலவு செய்யப்பட்ட ரூ.163.62 கோடி தொகை 10 நாட்களுக்குள் திரும்ப செலுத்த வேண்டும் என்று தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகம் (DIP) எச்சரித்துள்ளது. அவ்வாறு மீறும் பட்சத்தில் கட்சி அலுவலகம் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக அரசின் திட்டங்கள் மற்றும், அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு குறிப்பிட்ட தொகை ஒதுக்கப்படும். இந்த தொகையின் மூலம் பேனர், டிவி விளம்பரம், துண்டு பிரசுரம், சுவர் விளம்பரம் என பல்வேறு வடிவங்களில் அரசின் நலத்திட்டங்கள், புதிய அறிவிப்புகள், பொதுநலன் சார்ந்த அறிவுறுத்தல்கள் ஆகியவை விளம்பரம் செய்யப்படும். ஆனால் இவ்வாறு ஆளும் அரசுகள் செய்யும் விளம்பரங்கள் உண்மையில் அதற்கான நோக்கத்தை மக்களிடத்தில் கொண்டு செல்வதை காட்டிலும் தங்களது அரசியல் கட்சியை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கவே பயன்படுத்துகின்றன என்கிற குற்றச்சாட்டு எழத்தொடங்கியது.
இதனையடுத்து கடந்த 2014ம் ஆண்டு இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் விளம்பரங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவதற்கான குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு புதிய நெறிமுறைகளை வகுத்து கொடுத்தது. இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் இனி தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் மேற்கொள்ளும் அரசுகள் இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.

ஆம் ஆத்மி
ஆனால் இந்த வழிமுறைகளை ஆம் ஆத்மி கட்சி மீறிவிட்டதாக டெல்லி துணைநிலை ஆளுநர் சக்சேனா கடந்த டிசம்பரில் குற்றச்சாட்டை எழுப்பினார். டெல்லியை பொறுத்த அளவில் அங்கு கடந்த 2015ம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சிதான் ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு வரை டெல்லி உள்ளாட்சியில் பாஜக ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், சமீபத்தில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இதனையும் கைப்பற்றியது. எனவே இந்த ஆண்டு முதல் டெல்லி உள்ளாட்சியையும் ஆம் ஆத்மி நிர்வகிக்க இருக்கிறது. இதற்கிடையில் பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையேயான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விமர்சனம்
மத்திய அரசின் பிரதிநிதியாக டெல்லியின் ஆளுநராக இருக்கும் சக்சேனா ஆம் ஆத்மி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். சமீபத்தில் புதிய மதுபான கொள்கை திரும்ப பெறப்படுவதாக ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. இது மத்திய அரசுக்கு மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே ஆம் ஆத்மி கட்சியின் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் என்று பாஜக விமர்சித்தது. இதே கருத்தை ஆளுநரும் பிரதிபலித்தார். குறிப்பாக டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இந்த குற்றச்சாட்டுக்கு உள்ளானார். அவர் பணமோசடியில் ஈடுபட்டதாக ஆளுநர் விமர்சித்திருந்தார்.

மோதல் போக்கு
மறுபுறம் ஏற்கெனவே பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் சந்யேந்தர் ஜெயின் தொடர்புடைய வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் பின்னால் பாஜக இருப்பதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. மேலும், தங்களது அரசை பழிவாங்க பாஜக தொடர்ந்து முயன்று வருவதாகவும் அதற்கேற்பதான் ஆளுநர் உள்ளிட்டோர் அரசுக்கு எதிராக செயல்படுகிறார் என்றும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இப்படியாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து வந்த நிலையில்தான் கடந்த டிசம்பரில் புதிய சர்ச்சை வெடித்தது.

ஆளுநர்
ஆம் ஆத்மி அரசு அரசியல் விளம்பரங்களை அரசு செலவில் செய்ததாகவும் இதற்காக சுமார் ரூ.99.31 கோடி செலவாகியுள்ளதாகவும் ஆளுநர் சக்சேனா குற்றம்சாட்டினார். இத்துடன் நிற்காமல் இந்த தொகை வசூல் செய்ய வெண்டும் என்று டெல்லி தலைமை செயலாளருக்கு அவர் உத்தரவும் கடந்த டிசம்பரில் பிறப்பித்திருந்தார். அப்போது ஆம் ஆத்மி இதனை பெரியதாக கண்டுக்கொள்ளவில்லை. வழக்கம்போல, "எங்களது அரசை பழிவாங்கதான் ஆளுநர் இவ்வாறு செய்கிறார்" என்று அக்கட்சி சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது. இப்படி இருக்கையில் இன்று மற்றொரு நோட்டீஸ் ஆம் ஆத்மிக்கு வந்து சேர்ந்தது.

மொத்தமாக
இந்த முறை தகவல் மற்றும் விளம்பர இயக்குநரகம் (டிஐபி) இதனை அனுப்பியிருந்தது. அதில், ஏற்கெனவே ஆளுநர் குறிப்பிட்ட ரூ.99.31 கோடி மற்றும் அதற்கான வட்டி ரூ. 64.31 கோடி என மொத்தமாக ரூ.163.62 கோடி (ரூ.1,63,61,88,265) தொகை மத்திய அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்கு 10 நாட்கள்தான் அவகாசம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த அவகாசத்திற்குள் குறிப்பிட்ட தொகை செலுத்தவில்லையெனில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஆம் ஆத்மி, "பாஜகவின் வழிகாட்டுதலின்படி அதிகாரிகளும், ஆளுநரும் செயல்படுகிறார்கள். நாங்கள் தேசிய கட்சியாக உருவெடுத்துவிட்டோம் என்று பாஜக புலம்புகிறது. அதன் வெளிப்பாடுதான் இது" என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் சௌரப் பரத்வாஜ் விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications