இ-வே பில் இணையதளம் திடீரென முடங்கியது.. திமுக எம்பி பரபரப்பு புகார்.. ஜிஎஸ்டி கவுன்சில் விளக்கம்
டெல்லி: இ-வே பில் இணையதளம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கி உள்ளது. இதுபற்றி ஜிஎஸ்டி அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இ-வே பில் உருவாக்கும் இணையதளம் முடங்கி உள்ளதாகவும், விரைவில் சரி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதியுடன் காலாவதியாகும் பில்ககள், இணையதளம் செயல்பாட்டிற்கு வந்த உடன் மேலும் ஒரு நாள் காலஅவகாசம் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சரக்கு சேவை வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் 50000க்கு மேல் உள்ள சரக்குகளை வணிகர்கள் எடுத்து செல்ல இ-வே பில் என்பது அவசியமான ஆவணம் ஆகும். இந்த இ-வே பில் இருந்தால் தான் சரக்குகளை மாநிலம் விட்டு விட்டு மாநிலம் எடுத்து செல்ல முடியும். இந்த இ-வே பில்லை https://ewaybillgst.gov.in/ என்ற இணையதளத்தில் உருவாக்க முடியும்.

அதேபோல் எஸ்எம்எஸ் மூலமாகவும், ஆண்ட்ராய்டு செயலி மூலமாகவோ உருவாக்க முடியும்.. எல்லாமே https://ewaybillgst.gov.in/ இணையதளம் வழியாக நடைபெறும். இ-வே பில் உருவாக்கினால், சப்ளையர், பெறுநர் மற்றும் டிரான்ஸ்போர்ட் செய்பவர் ஆகியோருக்கு பிரத்யேமான இவே பில் எண் கிடைக்கும்.
சரக்குகளை அனுப்புபவர்/சப்ளையர் தனது சொந்த வாகனத்தில் கொண்டு செல்லும்போதும், வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனத்தில், அல்லது கப்பல் அல்லது விமானம் அல்லது ரயில்வே மூலம் சரக்குகளை அனுப்பும் சப்ளையர், சரக்கை பெறுபவர் தனது சொந்த வாகனத்தில் பொருட்களை கொண்டு செல்லும்போது,வாடகைக்கு எடுக்கப்பட்ட வாகனம், அல்லது கப்பல் அல்லது விமானம் அல்லது ரயில்வே மூலம் சரக்கு பெறுபவர் சரக்குகள் கொண்டு செல்லப்படும் போது இ வே பில்லை உருவாக்க வேண்டும்.
இதேபோல் பதிவுசெய்யப்பட்ட சப்ளையர் ஒரு டிரான்ஸ்போர்ட்டரிடம் பொருட்களை ஒப்படைக்கும்போதும் இவே பில்லை உருவாக்க வேண்டும். பதிவு செய்யப்படாத சப்ளையர் ஒருவரிடம் சரக்குகளை ஒப்படைக்கும் போது டிரான்ஸ்போர்ட் வைத்திருப்பவர் இவே பில்லை உருவாக்க வேண்டும். இ-வே பில் என்பது சரக்கு சேவை வரியில் மிகவும் முக்கியமான விஷயம் ஆகும். இவே பில் இல்லை என்றால் சரக்குகளை எடுத்து செல்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். மேலும் பெரிய சிக்கலும் உருவாகும். இதன் காரணமாக வணிகத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இவே பில் உருவாக்கித்தான் சரக்குகளை அனுப்பும்.
இந்நிலையில் இ-வே பில் இணையதளம் திடீரென தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கி உள்ளது. சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக முடங்கி உள்ளது. இதன் காரணமாக பலரும் இவே பில் உருவாக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுபற்றிஜிஎஸ்டி தொழில்நுட்ப அமைப்பு விளக்கம் அளித்துள்ளது. அந்த பதிவில் கூறுகையில், "அன்புள்ள வரி செலுத்துவோருக்கு..
இ-வே பில் உருவாக்கும் பிராசஸ் தற்போது தொழில்நுட்ப சவால்களை சந்தித்து வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த சிக்கலை விரைவில் தீர்க்க எங்கள் தொழில்நுட்ப குழு தீவிரமாக முயற்சித்து வருகிறது. தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு, அவசரகால நடவடிக்கையாக, பின்வரும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன:
1. டிசம்பர் 31, 2024 அன்று காலாவதியாகும் இ-வே பில்களுக்கு, இணைதளம் செயல்பாட்டுக்கு வந்ததும் ஒரு நாள் நீட்டிப்பு வழங்கப்படும்.
2. இ-வே பில்களை உருவாக்க முடியாத வரி செலுத்துவோர்/போக்குவரத்து செய்பவர்கள் இந்த நேரத்தில் பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இணையதளம் மீட்டெடுக்கப்பட்டவுடன் இ-வே பில்கள் உருவாக்கப்பட வேண்டும், அதற்கேற்ப தெரிவிக்கப்படும்.
இந்த விஷயத்தில் உங்கள் பொறுமை மற்றும் ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றி" இவ்வாறு ஜிஎஸ்டி தொழில்நுட்ப குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நான்கு மணி நேரமாக E Way bill generating இணையதளம் வேலை செய்யவில்லை.. அனேகமாக இந்த தொழில் நுட்ப கோளாறால் சில குஜராத்தி நிறுவனங்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் என்று திமுக நிர்வாகியும் மாநிலங்களவை எம்பியான புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்எம் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications