வேளாண் சட்டம் வாபஸ்.. விவசாயிகளின் அடுத்தகட்ட முடிவு என்ன?.. முக்கிய ஆலோசனை!
டெல்லி: மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை கண்டித்து தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் போராட்டம் நடத்தி வந்தனர்.
விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் இதுவரை 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டது. ஆனால் இதில் எதிலும் முடிவு கிடைக்காமல் இருந்ததது. வேளாண் சட்டத்தை ஒன்றரை வருடத்திற்கு நிறுத்தி வைக்க தயாராக உள்ளதாக மத்திய அரசு கூறியது.

விவசாயிகள் போராட்டம்
ஆனால் வேளாண் சட்டத்தை முழுமையாக ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் திட்டவட்டமாக கூறினார்கள். விவசாயிகளை அடிக்கடி பேச்சுவார்தைக்கு அழைக்கும் மத்திய அரசு, வேளாண் சட்டத்தை திரும்ப பெறுவதில் பிடிவாதமாக இருந்தது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பல்வேறு அமைப்புகள் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியதுடன், விவசாயிகளுக்கும் ஆதரவு கொடுத்தனர்.

விவசாயிகள் உறுதி
இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அதிரடியாக அறிவித்தார். விவசாயிகளிடம் மோடி அரசு மண்டியிட்டு விட்டது என்றும் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தலை மனதில் வைத்துதான் மத்திய அரசு இந்த முடிவெடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. வேளாண் சட்டத்தை அதிகாரப்பூர்வமாக திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

நவம்பர் 29-ம் தேதி பேரணி
கடந்த ஆண்டில் அவர்களில் பலருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 29-ம் தேதி அன்று நாடாளுமன்றத்திற்கு டிராக்டர் பேரணி மேற்கொள்ள விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். வேளாண் சட்டம் ரத்து அறிவிப்பு வந்த பிறகு விவசாயிகள் சங்க தலைவர்கள் சிங்கு எல்லையில் இன்று முதல் கூட்டம் நடத்தினர்கள். அப்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு திறந்த கடிதம் அனுப்ப முடிவு செய்தனர்,

அடுத்த நிகழ்ச்சிகள்?
லக்னோவில் நாளை கிசான் மகாபஞ்சாயத் நடைபெறும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். சர் சோட்டு ராமின் பிறந்தநாளான நவம்பர் 24 ஆம் தேதி கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் திவாஸ் அனுசரிக்கப்படும் என்றும், நவம்பர் 24 ஆம் தேதி டெல்லி எல்லைகளுக்கு பேரணி நடத்தப்படும் என்றும் விவசாயிகள் அறிவித்துள்ளனர். நவம்பர் 26 மற்றும் நவம்பர் 29-ம் தேதிகளில் அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications