'3.86 கோடி பேர்..' உரிய நேரத்தில் 2 ஆம் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை.. ஆர்டிஐயில் ஷாக் தகவல்
டெல்லி: இந்தியாவில் சுமார் 3.86 கோடி மக்கள் சரியான நேரத்தில் 2ஆவது டோஸ் வேக்சின் போட்டுக் கொள்ளவில்லை என்று மத்திய அரசு ஆர்டிஐ கேள்விக்குப் பதிலளித்துள்ளது.
உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிராக வேக்சின் மட்டுமே ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, டெல்டா கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட இந்தியாவில், இந்தாண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்ற இலக்குடன் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

கொரோனா வேக்சின்
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி, மாடர்னா மற்றும் ஜான்சன் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 வேக்சின்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும்கூட கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு வேக்சின்களே இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. கோவின் தளத்தில் உள்ள தகவலின்படி, நாட்டில் செவ்வாய்க்கிழமை வரை 44.22 கோடி பேருக்கு முதல் டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது. அதேபோல 12.59 கோடி பேருக்கு 2 டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.

கொரோனா 2ஆம் டோஸ்
இந்நிலையில், சமூக செயற்பாட்டாளர் ராமன் சர்மா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வேக்சின் பணிகள் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதாவது கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் முதல் டோஸைப் பெற்றவர்களில் எத்தனை பேர் அறிவிக்கப்பட்டுள்ள நேரத்திற்குள் 2ஆம் டோஸ் வேக்சின் எடுத்துக்கொள்ளவில்லை என அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி 4 முதல் 6 வார கால இடைவெளியிலும் கோவிஷீல்டு தடுப்பூசி 12 முதல் 16 வார கால இடைவெளியிலும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3.86 கோடி பேர்
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் ராமன் சர்மா கேட்டிருந்த கேள்விக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. அதில், "ஆகஸ்ட் 17ஆம் தேதி வரையிலான தரவுகளின்படி இந்தியாவில் முதல் டோஸ் கோவிஷீல்டு எடுத்துக் கொண்டவர்களில் 3,40,72,993 பேர் 2ஆவது டோஸை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல முதல் டோஸ் கோவாக்சின் எடுத்துக் கொண்டவர்களில் 46,78,406 பேர் சரியான நேரத்தில் கோவாக்சின் 2ஆம் டோஸை எடுத்துக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்தமாக நாட்டில் 3.86 கோடி மக்கள் சரியான நேரத்தில் 2ஆவது டோஸ் வேக்சின் போட்டுக் கொள்ளவில்லை.

2 டோஸ் வேக்சின் கட்டாயம் போட வேண்டும்
தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள காலத்தில் 2ஆவது டோஸை போட்டுக்கொள்ள வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஒருவர் கொரோனா வேக்சின் முதல் டோஸை எப்போது போட வேண்டும் என்பதில் எவ்வித பரிந்துரையும் இல்லை. ஆனால் இரண்டாம் டோஸை அரசு பரிந்துரைத்தபடி குறிப்பிட்ட காலத்திற்குள் போட்டுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கு வேக்சினின் முழு பலன் கிடைக்க வேண்டுமென்றால், அவர் தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொள்ள வேண்டும்" என்று மத்திய அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.

சர்வதேச ஆய்வுகள்
உலகளவில் நடைபெறும் பல்வேறு ஆய்வுகளிலும் 2 டோஸ் வேக்சின் அதிக பலன் தருவது தெரிய வந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் வேக்சின் மட்டுமே அதிக பலன் அளிப்பது பல்வேறு ஆய்வுகளிலும் தெரிய வந்துள்ளது. எனவே, பொதுமக்கள் முடிந்தவரை விரைவாக 2 டோஸ் வேக்சின்களை போட்டுக் கொள்ள வேண்டும் என்பதை மத்திய அரசும் சரி ஆய்வாளர்களும் சரி தொடர்ந்து பரிந்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications