பில்கிஸ் பானு வழக்கின் தீர்ப்பை.. மறுசீராய்வு செய்ய வேண்டும்! உச்சநீதிமன்றத்தை நாடிய குஜராத் அரசு
டெல்லி: பில்கிஸ் பானு தொடர்பான வழக்கில், விடுதலை செய்யப்பட்ட 11 கைதிகளும் மீண்டும் சிறைக்கு திரும்ப வேண்டும் என்று கூறி குஜராத் மாநில அரசை உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது. இந்நிலையில், இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று குஜராத் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறது.
கடந்த 2002ம் குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து மாநிலம் முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்கள் அதிகரிக்கத் தொடங்கின. இந்த கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். அவரது உறவினர்கள் கொலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இதில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது.

ஆனால் தண்டனைக்காலம் முடிவடைவதற்குள் இவர்களை கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது. விடுதலையானவர்களுக்கு ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து சிலர் வரவேற்பளித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த எதிர்ப்பு குஜராத் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதாவது, 1992ம் ஆண்டு தண்டனை குறைப்பு கொள்கையின் இதனை குற்றவாளிகள் அனைவரும் சிறையில் கழித்திருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் தண்டனை குறைப்பு கோரினார்கள். சிறை ஆலோசனைக் குழு பரிந்துரைகள், மாவட்ட சட்ட வல்லுநர்கள் அறிவுரைகளின் அடிப்படையில்தான் அவர்களுக்கு தண்டனை குறைப்பு செய்யப்பட்டிருக்கிறது என்று விளக்கமளித்திருந்தது. இருப்பினும் இந்த விடுதலையை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி சுபாஷினி அலி உட்பட மூவர் உச்சநீநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. வழக்கின் வாதங்கள் முடிவுற்ற நிலையில் கடந்த ஜனவரி மாதம் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில், "இந்த வழக்கு மகாராஷ்டிராவில் நடைபெற்றதால், குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை. மகாராஷ்டிரா அரசுதான் 11 பேரின் விடுதலை குறித்து முடிவெடுக்க முடியும். எனவே, குற்றவாளிகளை விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்கிறோம்" என்று கூறினர்.
மேலும், "பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்றங்களை மன்னிக்க முடியாது. குற்றவாளிகள் அனைவரும் இரண்டு வாரங்களுக்குள் சிறை அதிகாரிகளிடம் ஆஜராக வேண்டும்" என்றும் உத்தரவிட்டனர்.
மட்டுமல்லாது, "குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தை குஜராத் அரசு பறித்துள்ளது" என கடுமையா விமர்சித்திருந்தனர்.
இந்நிலையில், குஜராத் மாநில அரசின் மீதான விமர்சனங்கள் குறித்து மறுபரிசீலனை செய்ய அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது. அதில், தங்களுக்கு எதிரான பாதகமான கருத்துக்களை நீக்க வேண்டும் என்று குஜராத் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. "அதிகரித்தை அபகரித்தல் என்று நீதிமன்றம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. குற்றவாளிகளுடன் இணைந்து அவர்களுக்கு உடந்தையாக குஜராத் அரசு செயல்பட்டுள்ளது என்கிற கூற்று குஜராத் மீது தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும்" என்றும் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications