'விவேகானந்தர் கூறியதை பாருங்கள்'.. 'ஆயுதம் தூக்குவோம்' என பேசிய சாமியார்களுக்கு நிதின் கட்கரி பதிலடி
டெல்லி: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கடந்த மாதம் 17-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை இந்து சாமியார்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சாமியார்கள் சிலர் வன்முறையை தூண்டும் வகையில் பேசியதால் சர்ச்சை எழுந்தது.
இந்து ரக்சா சேனா அமைப்பின் தலைவர் பிரபோதானந்த் கிரி, பாஜக தலைவர்கள் அஸ்வினி உபாத்யாய், உதிதா தியாகி ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஆயுதம் தூக்க வேண்டும்
''இந்து மதம் அழிகிறது. அண்டை நாடுகளில் இந்துக்கள் விரட்டப்படுகிறார்கள். நம்முடைய நாட்டிலும் இந்துக்களுக்கு இதே நிலைதான். நாம் இப்போதே ஆயுதம் தூக்க வேண்டும். நாம்தான் தாக்க வேண்டும். கொல்ல வேண்டும். இல்லையென்றால் நாம் கொல்லப்படுவோம் என்று இந்த கூட்டத்தில் பங்கேற்ற இந்து சாமியார்கள் மத வன்முறையை தூண்டும் வகையில் பேசினார்கள். இதேபோல் டெல்லியில் நடந்த இந்து சாமியார்கள் மாநாட்டிலும் வன்முறையை தூண்டும் வகையில் கருத்து கூறியதாக புகார் எழுந்தது.

பெயரளவுக்கு மட்டுமே வழக்குப்பதிவு
ஆனால் சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது போலீசார் பெயரளவுக்கு மட்டுமே நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. வெறும் 5 பேர் மீது மட்டுமே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்து சாமியார்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பாக நீதித்துறை உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவுக்கு, உச்ச நீதிமன்றத்தின் 76 வழக்கறிஞர்கள் பரபரப்பு கடிதம் ஒன்றை ஏற்கனவே அனுப்பினார்கள்.

பிரதமருக்கு முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடிதம்
இதேபோல் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்தும்படியும் 5 முன்னாள் ராணுவ அதிகாரிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இதுபோன்ற வெறுப்புப் பேச்சுகளை நிராகரிக்க வேண்டும். இதற்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

சுவாமி விவேகானந்தர் கூறியதை பாருங்கள்
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர், '' நமது மதம் சகிப்புத்தன்மை, எளிமை, உள்ளடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. சுவாமி விவேகானந்தர் சிகாகோவில் நடந்த மத மாநாட்டில் இவற்றைதான் கூறினார். இதனை அனைவரும் பிடிக்க வேண்டும். நமது மன்னர்கள் யாருடைய வழிபாட்டுத் தலத்தையும் உடைத்ததில்லை. நாம் விரிவாக்கவாதிகள் அல்ல. உலகின் ஒவ்வொருவருக்கும் , ஒவ்வொரு உயிரினத்திற்கும் நல்லதையே விரும்புகிறோம். இதுதான் நமது பாரம்பரியம் மற்றும் நமது பார்வை என்று நிதின் கட்கரி கூறினார்.

புல்லி பாய் செயலி குறித்து கருத்து
தொடர்ந்து பேசிய அவர், ''நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க வேண்டும், அனைத்து மதத்தினரிடமும் மரியாதையுடன் இருக்க வேண்டும், யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தக்கூடாது, அனைவரையும் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்' என்று கூறினார். முஸ்லீம் பெண்களை தவறாக கூறும் புல்லி பாய் செயலி குறித்த கேள்விக்கு பதிலளித்த நிதின் கட்கரி ''சில தனிநபர்களின் செயல்களை ஒரு சமூகத்தின் பிரதிபலிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சட்டம் அதன் வேலையை செய்யும்' என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications