தொகுதி பங்கீட்டில் தொடரும் இழுபறி.. நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்! இந்தியா கூட்டணி இன்று ஆலோசனை
டெல்லி: ஜனவரி 14ம் தேதி ராகுல் காந்தி இரண்டாம் கட்டமாக பாரத் ஜடோ யாத்திரை தொடர இருக்கிறார். இந்த தேதிக்குள் இந்தியா கூட்டணி தொகுதி பங்கீடுகளை முடிக்க திட்டமிட்டிருந்தது. ஆனால், தொடர் இழுபறி காரணமாக இது சாத்தியப்படவில்லை. இந்நிலையில், இது தொடர்பாக இன்று இந்தியா கூட்டணி தலைவர்கள் காணொலி மூலம் இன்று ஆலோசனை மேற்கொண்டனர்.
மக்களை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில் இந்தியா கூட்டணி இன்னும் தொகுதி பங்கீட்டை முடிக்கவில்லை. மட்டுமல்லாது பிரதமர் வேட்பாளர் குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த தேர்தல் காங்கிரசுக்கு மிக முக்கியமான தேர்தலாகும். கடந்த 10 ஆண்டுகளில் காங்கிரஸ் ஏராளமான இழப்புகளை எதிர்கொண்டிருக்கிறது. ஏற்கெனவே ஆட்சியிலிருந்த மாநிலங்கள் தற்போது கை நழுவி இருக்கிறது. மூத்த தலைவர்கள் சிலர் வெளியேறி உள்ளனர்.

திரிணாமுல் காங்கிரஸையும், ஆம் ஆத்மியையும் பாஜகவின் 'பி' டீம் என்று சொல்லி வந்த காங்கிரஸ், தற்போது அந்த கட்சிகளையும் இணைந்து இந்தியா கூட்டணி என்கிற பெயரில் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. காரணம் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விதான். 421 தொகுதிகளில் களம் கண்ட காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. எனவே இந்த முறை எப்படியாவது பாஜகவை தோற்கடிப்பது என தீவிர முயற்சியில் கட்சி இறங்கியுள்ளது. அதன் வெளிப்பாடுதான் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணி.
மட்டுமல்லாது, இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் பிரதமராக மீண்டும் நரேந்திர மோடிதான் பதவியேற்பார். இதன் மூலம் நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக தொடர்ச்சியாக பிரதமராக பதவியேற்றவர் என்கிற பெருமையை மோடி பெறுவார். அதேபோல 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ன் 100வது ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஆர்எஸ்எஸ் பிரம்மாண்ட வளர்ச்சியை எட்டும். பதிலுக்கு காங்கிரஸ் இன்னும் பலவீனமடையும்.
இதையெல்லாம் காங்கிரஸ் விரும்பவில்லை, எனவே இந்தியா கூட்டணியில் அது உறுதியாக இருக்கிறது. ஆனால் இந்த கூட்டணியில் தற்போது தொகுதி பங்கீட்டில் பயங்கர சிக்கல்கள் மேலெழுந்திருக்கின்றன. மேற்கு வங்கத்தில் வெறும் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குவேன் என மமதா கூறியிருந்தது காங்கிரஸின் பொறுமையை சோதித்திருக்கிறது. மகாராஷ்டிராவில் காங்கிரசுடன் கூட்டணியில் இருக்கும் தேசியவாத காங்கிரசும், சிவசேனாவும் முரண்பட்டிருக்கிறது. கேரளாவில் சிபிஎம் அவ்வளவு எளிதில் விட்டுக்கொடுக்காது, உத்தரப் பிரதேசத்திலும் அகிலேஷ் யாதவ் காங்கிரசுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குவதை அவ்வளவாக விரும்பவில்லை.
இத்தனை பஞ்சாயத்துகளுக்கு மத்தியில்தான் இன்று இந்தியா கூட்டணி தலைவர்களின் 5ம் கட்ட கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது. எப்படியாயினும் இந்த மாதம் முடிவதற்குள் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தால்தான் தேர்தலை எதிர்கொள்வதில் சிக்கல் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications