நாட்டில் எல்லோருக்கும் வேலை இருக்கிறது.. காங்கிரஸ் இளவரசருக்கு மட்டுமே வேலையில்லை: தேஜஸ்வி சூர்யா
நாட்டில் கடின உழைப்பாளி மற்றும் திறமையானவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. வேலையில்லாத ஒரே நபர் காங்கிரஸ் கட்சியின் இளவரசன் என்று ராகுல்காந்தியை சாடியுள்ளார் பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா.
டெல்லி: நாட்டில் திறமையான மற்றும் கடின உழைப்பாளிகளுக்கு போதுமான வாய்ப்புகள் உள்ளன என்று பாஜக எம்பி தேஜஸ்வி சூரியா கூறினார். ராகுலை விமர்சித்த அவர், "காங்கிரஸ் கட்சியின் இளவரசர் மட்டுமே வேலையில்லாதவர்" என்று தெரிவித்துள்ளார். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்ற ராகுல் காந்தியின் கூற்றுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா லோக்சபாவில் பேசியுள்ளார். காங்கிரஸ் தலைவரின் கூற்று முற்றிலும் ஆதாரமற்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு லோக்சபாவில் பேசிய ராகுல்காந்தி, இந்தியாவில் இரண்டு இந்தியாக்கள் உள்ளன. ஒன்று பணக்காரர்களுக்கு. மற்றொன்று ஏழைகளுக்கு எனத் தெரிவித்தார். இரண்டுக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து வருகிறது. இரண்டு இந்தியாக்களை உருவாக்கிய இந்த அரசு ஒன்றாக கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேட் இன் இந்தியா என பேசிக்கொண்டே இருக்கிறீர்கள். மேட் இன் இந்தியா இனி சாத்தியமில்லை. மேட் இன் இந்தியாவை அழித்துவிட்டீர்கள் என ஆவேசமாக குற்றம்சாட்டிய ராகுல்காந்தி,. சிறு, குறு தொழில்களை ஆதரித்தால் மட்டுமே மேட் இன் இந்தியா சாத்தியம். சிறு குறு தொழில்களால் மட்டுமே வேலை வாய்ப்பை உருவாக்க முடியும் எனக் கூறினார்.

தேஜஸ்வி சூர்யா
இரண்டு இந்தியாவைப் பற்றி ராகுல் பேசிய சில நாட்களுக்குப் பிறகு, ஒன்று மிகவும் பணக்காரர்கள் மற்றும் மற்றொன்று ஏழைகள், இரண்டு இந்தியாவும் உண்மையில் மோடிக்கு முன் இந்தியா என்றும் மோடிக்குப் பிறகு இந்தியா என்றும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

பணவீக்கம்
மோடிக்கு ஆட்சிக்கு வரும் முன்பு முன்பு இரட்டை இலக்க பணவீக்கம் இருந்தது. இப்போது ஒற்றை இலக்க பணவீக்கம் உள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு முன்பு 110 லட்சம் கோடியாக இருந்தது. மோடிக்கு பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் அளவு ரூ.230 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு
மோடிக்கு முன் இந்தியாவின் ஏற்றுமதி ரூ.2.85 லட்சம் கோடியாக இருந்தது. மோடிக்கு பிறகு ரூ.4.7 லட்சம் கோடியாக உள்ளது என்றும் தேஜஸ்வி சூர்யா தெரிவித்தார். ஜிடிபி பல மடங்கு அதிகரித்துள்ளது. அன்னிய நேரடி முதலீடு பல மடங்கு அதிகரித்துள்ளது, அப்படி இருக்கும் போது வேலைவாய்ப்பு உருவாக்கம் என்பது எப்படி இருக்காது என்றும் கேள்வி எழுப்பினார்.

வேலையில்லாத இளவரசர்
காங்கிரஸ் கட்சியும் அவர்களது பரம்பரைத் தலைவர்களும் தங்களின் அரசியல் வேலைவாய்ப்பின்மையை நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் என்று குழப்பிக் கொண்டிருக்கிறார்கள். கடின உழைப்பாளி மற்றும் திறமையானவர்களுக்கு எல்லா வாய்ப்புகளும் உள்ளன. வேலையில்லாத ஒரே நபர் காங்கிரஸ் கட்சியின் இளவரசன் என்று பெங்களூரு தெற்கு எம்.பி தேஜஸ்வி சூர்யா கடுமையாக சாடினார்.












Click it and Unblock the Notifications