அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்க்கும் திமுக அரசு - தர்மேந்திர பிரதான் குற்றச்சாட்டு
டெல்லி: நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (மார்ச் 10) நடைபெற்றது. இதில், அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி 2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் முதல் கட்ட அமர்வு பிப்ரவரி 13 ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து இரண்டாம் கட்ட அமர்வு இன்று மார்ச் 10 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது,

பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடியும் பங்கேற்று பேசினார். தொடர்ந்து, நாடாளுமன்றத்தில், பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இரு அவைகளும் மார்ச் 10 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இன்று பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் அமர்வு இன்று நடைபெற்றது.
இதில், தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி மறுக்கப்படுகிறது என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் கேள்வி எழுப்பினார். மேலும், புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் இந்தி திணிக்கப்படுவதாக தமிழக அரசு தவறாக பரப்புரை மேற்கொண்டு வருகிறது. தமிழக மாணவர்களை திமுக அரசு வஞ்சிக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறது என்று தெரிவித்தார்.
இதனால், நாடாளுமன்றத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பதிலை ஏற்க மறுத்து திமுகவினர் முழக்கம் எழுப்பத் தொடங்கினர். மக்களவையில் கடும் அமளி ஏற்பட்டதையடுத்து, அவை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களைச் சந்தித்த தர்மேந்திர பிரதான், அரசியலுக்காக மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், மும்மொழிக் கொள்கையில் தமிழக அரசுக்கு புரிதல் இல்லை என்றும் இதனை எதிர்க்க சரியான காரணம் இல்லாததால் அவர்கள் உணஅமைக்கு எதிராக மட்டுமே பேசுகின்றனர்.
திமுக எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டு திசைதிருப்புகின்றனர். பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கான நிதியை வழங்குவதில் மத்திய அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. அதை பெற தமிழ்நாடு அரசுக்கு அக்கறை இல்லை. இத்திட்டத்தில் சேர விரும்பாத மாநிலங்கள் இதில் சேர வேண்டும். தேசிய கல்விக் கொள்கையில் திமுக அரசு அரசியல் செய்ய பார்க்கிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications