கடவுள் பெயரை சொல்லி காமலீலை.. மாணவிகளை சீரழித்த சிவசங்கர் பாபா.. ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்!
டெல்லி : மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் சாட்சியங்களை கலைக்க முற்படக்கூடாது, கேளம்பாக்கம் பள்ளிக்கு செல்லக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளையும் விதித்துள்ளது.
சென்னை கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, தனது பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
3 மாணவிகள் கொடுத்த புகார்களின்பேரில் சிவசங்கர் பாபா மீது தனித்தனியாக 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக நடன ஆசிரியை சுஷ்மிதாவையும் சிபிசிஐடி கைது செய்தனர்.

சிவசங்கர் பாபா கைது
சுஷில் ஹரி பள்ளியில் படித்த மாணவி ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசிக்கும் நிலையில் ஆன்லைன் மூலம் சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார் கொடுத்தார். இதேபோல மற்றொரு முன்னாள் மாணவிக்கும் சிவசங்கர் பாபா பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, பெங்களூருவில் வசிக்கும் தாய் புகார் கொடுத்தார். அடுத்தடுத்து மாணவிகள் அவர் மீது புகார் கொடுத்த நிலையில், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மொத்தம் 8 வழக்குகள்
சிவசங்கர் பாபா மீது இதுவரை மொத்தம் 6 போக்சோ வழக்குகள், 2 பெண் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை செங்கல்பட்டு நீதிமன்றம் , சென்னை உயர்நீதிமன்ற ஆகியவை தள்ளுபடி செய்தன. இதனையடுத்து தனக்கு உடல்நிலை சரியில்லாததால் ஜாமீன் வழங்க வேண்டுமென சிவசங்கர் பாபா தரப்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு வாதம்
ஜாமீன் மனு மீது நேற்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டால், சாட்சிகளை அச்சுறுத்தி ஆதாரங்களை கலைத்துவிடுவார். வழக்கு விசாரணையில் இருந்து தப்பித்துக்கொள்ள அவர் வெளிநாடு செல்ல அனைத்து வாய்ப்புகளும் உள்ளன எனவும், எனவே சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன்
இந்நிலையில் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெற்ற நிலையில், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே நேரத்தில் தமிழக அரசின் வாதங்களையும் கவனத்தில் கொண்ட நீதிபதிகள், சாட்சியங்களை கலைக்க முற்படக்கூடாது, கேளம்பாக்கம் பள்ளி மற்றும், மடத்திற்கு செல்லக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்குவதாகவும், நிபந்தனைகள் மீறினால் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் கூறியது.












Click it and Unblock the Notifications