நடிகை பாலியல் வழக்கு.. சீமான் மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்
டெல்லி: நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகை ஒருவர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றி தன்னுடன் உறவு வைத்துக் கொண்டதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு புகார் அளித்தார். புகாரின்பேரில், சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 17 ஆம் தேதி நடைபெற்றது. அப்போது, நீதிபதி கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது. இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக சீமான் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் முறையாக கருத்தில் கொள்ளவில்லை. தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரை, 12 வாரங்களுக்குள் புலன் விசாரணை நடத்தி காவல் துறையினர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை சம்பந்தப்பட்ட நடிகை மூன்று முறை திரும்பப் பெற்றுள்ளார். தற்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளதால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மீண்டும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று வாதிட்டார்
இந்த வழக்கு தொடர்பாக எதிர்மனுதாரர் உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன் மூலம் வளசரவாக்கம் போலீஸாரின் விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications