ஜம்மு காஷ்மீர் குறித்து சீனா கருத்து.. அது எங்கள் பகுதி இனியும் அப்படித்தான்.. இந்தியா பதிலடி..!
டெல்லி : ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம் எனவும், சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கருத்து தெரிவிக்க எந்த இடமும் இல்லை என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்து வந்த பிரிவு 370, மத்திய பாஜக அரசால் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அதிரடியாக நீக்கப்பட்டது.
அதன் பிறகு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு - காஷ்மீர் மாற்றப்பட்டது.

சீனா அமைச்சர் கருத்து
இந்நிலையில் பாகிஸ்தானில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் தனது தொடக்க உரையில் பேசிய சீன அமைச்சர் வாங் யி காஷ்மீர் பற்றி குறிப்பிட்டிருந்தார். "காஷ்மீர் தொடர்பாக, நமது இஸ்லாமிய நண்பர்கள் பலரின் அழைப்புகளை இன்று மீண்டும் கேட்டுள்ளோம். சீனாவும் அதே நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறது என்றார். சீனா அமைச்சரின் இந்த கருத்தை ஏற்கனவே இந்தியா நிராகரித்திருந்தது.

இந்தியா நிராகரிப்பு
சீனா-பாகிஸ்தான் கூட்டு அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஜம்மு மற்றும் காஷ்மீர் பற்றிய குறிப்புகளை இந்தியா நிராகரித்ததோடு, இப்பகுதி மற்றும் லடாக் யூனியன் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கிறது, இனியும் இருக்கும் என்று வலியுறுத்தியது. இதுகுறித்து இந்தியா சார்பில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி , "இதுபோன்ற குறிப்புகளை இந்தியா எப்போதும் நிராகரிக்கிறது, எங்கள் நிலைப்பாடு சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும்" என்றார்.

இந்தியாவின் உள்விவகாரம்
அதே நேரத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்திய சீனா, நிலைமையை சிக்கலாக்கும் எந்தவொரு ஒருதலைப்பட்ச நடவடிக்கையையும் எதிர்ப்பதாகக் கூறியது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் உள்விவகாரம் என்றும், பாகிஸ்தானில் நடந்த நிகழ்ச்சியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ பேசியதை நிராகரிப்பதாகவும் இந்தியா இன்று மீண்டும் கூறியுள்ளது. "ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடர்பான விவகாரங்கள் முழுக்க முழுக்க இந்தியாவின் உள்விவகாரம். சீனா உள்ளிட்ட பிற நாடுகளுக்கு கருத்து தெரிவிக்க எந்த இடமும் இல்லை என கூறப்பட்டுள்ளது

சீனா தவிர்க்க வேண்டும்
மேலும் இந்தியாவின் உள் விவகாரங்களில் குறித்து பொது பேச்சுகளை சீனா தவிர்க்க வேண்டும்" என்று வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி கூறினார். சீன வெளியுறவு அமைச்சரின் பேச்சு குறித்த கேள்விகளுக்கு இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது இந்த கருத்துகள் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications