ரயில் விபத்துகளுக்கு முற்றுப்புள்ளி எப்போது! ரயில்வே துறைக்கு கடந்த 5 ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி என்ன?
டெல்லி: சமீப காலமாக ரயில் விபத்துக்கள் தொடர்ந்து வருகின்றன. இந்நிலையில் இந்த பட்ஜெட்டில் ரயில்வேத்துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கான நிதியை அதிகரிக்குமா மத்திய அரசு என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து வருகின்றனர்.
உலகின் மிகப்பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, மிகப்பெரிய நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக நடக்கும் ரயில் விபத்துக்கள் இந்தியன் ரயில்வேக்கு ஒரு களங்கமாக மாறியிருக்கிறது. ரயில் பயணங்கள் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த காலம் போய், ரயில் பயணத்தில்தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்கிற பேச்சு தற்போது அடிப்பட தொடங்கியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகியிருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது, ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது, இது தவிர ஆங்காங்கே சரக்கு ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த விவாதங்கள் ஓய்வதற்குள் கடந்த 18ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியது.
இந்த தொடர் விபத்துக்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ரயில்வேதுறை சிறப்பாக செயல்படவில்லையா? என்றும் பலர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
ரயில்வே துறையை பொருத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 50 ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி செய்யப்படுவதில்லை. புதிதாக ஆட்கள் தேர்வு உடனடியாக நடப்பதில்லை என்று ரயில்வே தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டுகின்றன.
உலகின் மிகப்பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, மிகப்பெரிய நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. இதனை இயக்க லட்சக்கணக்கில் பணியாட்கள் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 50 ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி செய்யப்படுவதில்லை. புதிதாக ஆட்கள் தேர்வு உடனடியாக நடப்பதில்லை.
ரயில்வே பாதுகாப்பு துறையில் மட்டும் சுமார் 1.72 லட்சம் ஊழியர்களை உடனடியாக நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது. தண்டவாள பராமரிப்பு பணிக்கு 87 ஆயிரம் பேரும், ஸ்டேஷன் மாஸ்டர் 64 ஆயிரம் பேர், டிரைவர்கள் 10 ஆயிரம், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15 ஆயிரம் பேர் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
ரயில்வே துறையில் உள்ள மற்றொரு பிரச்னை டெக்னாலஜி. ஒவ்வொரு ஆண்டுக்கும் 200 சிக்னல்கள் பழுதாகிறது. அதில் 100தான் பராமரிக்கப்படுகிறது. இப்படியே ஆண்டுக்கு 100+100+100... என கூட்டிக்கொண்டே வந்தால் தற்போது சிக்னல் பராமரிப்புக்கு மட்டும் ரூ.7,800 கோடி தேவைப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் சிக்னலை பராமரிக்க 10 பேர் தேவை எனில் 7 பேரை கொண்டு அந்த வேலையை செய்ய சொல்கிறார்கள்.
இருப்பதோ ஏற்கெனவே பழைய சிக்னல். இதில் ஆள் பற்றாக்குறையோடு வேலை நடந்தால் அந்த வேலை முழுமையாக இருக்காது. எனவே சரி செய்யப்பட்ட 100 சிக்னல்களிலும் அடிக்கடி கோளாறு எழும். இது ஒரு 'டைம் லூப்' மாதிரி, இதிலிருந்து வெளியே வர வேண்டும் எனில் உடனடியாக ஆட்களை எடுக்க வேண்டும்.
மூன்றாவது பிரச்னை தண்டவாளம். சென்னை-மும்பை-ஹவுரா-டெல்லி இதுதான் இந்தியன் ரயில்வேயின் தங்க நாற்கர சாலை. நாட்டின் மொத்த பாதையில் 20% தண்டவாளங்கள் இந்த வழித்தடத்தில் இருக்கிறது. ஆனால் மொத்த ரயில் போக்குவரத்தில் 55% ரயில்கள் இந்த வழியில்தான் பயணிக்கின்றன. எனவே இந்த தண்டவாளங்களை பராமரிக்க வேண்டியது மிக மிக அவசியம் என்றும் ரயில்வே ஊழியர்கள் கூறுகின்றனர்.
இப்படி இருக்கையில் மத்திய அரசு தரப்பிலிருந்து, தொழிற்சங்கங்களின் விமர்சனங்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2018-2019ம் ஆண்டு ரூ.55,088 கோடி ரயில்வேக்கு ஒதுக்கப்பட்டது. இது 2019-2020ல ரூ.69,967 கோடியாகவும், 2020-2021ல் ரூ.70,250 கோடியாகவும், 2021-2022ல் ரூ.1.17 லட்சம் கோடியாகவும் உயர்த்தப்பட்டது.
அதன் பிறகு 2023-2024ம் நிதியாண்டில் ரயில்வேக்கு ரூ.2.45 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது. இது முந்தைய ஒதுக்கீட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டு ரூ.3 லட்சம் கோடிக்கும் அதிகமாக ரயில்வேக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2016-2017 வரை ரயில்வேக்கு என தனியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது வந்தது. ஆனால், 2017-2018ம் ஆண்டு பட்ஜெட்டில் பொதுபட்ஜெட்டுடன் ரயில்வேக்கான வரவு செலவும் இணைக்கப்பட்டது. இதை அப்போதைய நிதியமைச்சர் அருண் ஜெட்லிதான் இணைத்தார் என்பது ரயில்வே பட்ஜெட்டின் வரலாறாகும்.












Click it and Unblock the Notifications