மணி 10 ஆகியும்.. ராஜ்யசபா நிகழ்ச்சி நிரலை வெளியிடாத மத்திய அரசு.. மம்தா கட்சி எம்பிக்கு வந்த கோபம்
டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று காலை 10 மணியாகியும் ராஜ்யசபாவில் இன்று என்னென்ன விஷயங்கள் நடைபெற உள்ளது என்பது தொடர்பான நிகழ்ச்சி நிரல் வெளியிடவில்லை. இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி சாகேட் கோகலே, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 1ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலையில் லோக்சபா, ராஜ்யசபா கூட்டத்தொடர் காலை 11 மணிக்கு வழக்கம்போல் தொடங்கின.

இந்நிலையில் தான் ராஜ்யசபாவில் இன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை என்று ராஜ்யசபா எம்பி சாகேட் கோகலே குற்றம்சாட்டி உள்ளார். மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் அந்த கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராகவும் உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛இப்போது காலை 10 மணி ஆகிறது (நாடாளுமன்றம் தொடங்க இன்னும் ஒரு மணிநேரம் மட்டுமே உள்ளது). ஆனால் ராஜ்யசபாவின் இன்றைய நிகழ்ச்சி நிரல் குறித்த அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. நாடாளுமன்றம் அரசால் இப்படித்தான் நடத்தப்படுகிறதா? எதிர்க்கட்சிகள் முழுமையாக ஒத்துழைக்கின்றன. ஆனால் மோடி அரசின் நோக்கம் என்பது தீங்கிழைப்பதை காரணமாக கொண்டுள்ளது. மோடி அரசு நாடாளுமன்றத்தை கேலி செய்து வருகிறது'' என்று விமர்சனம் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications