பரிதாபத்தை பாருங்க.. தினமும் 350 உயிரிழப்புகள்.. உடல்களை தகனம் செய்ய.. இடங்களை தேடி அலையும் டெல்லி!
டெல்லி: டெல்லியில் தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உடல்களை புதைக்க இடமில்லை. உயிரிழப்பவர்களை கூட நல்ல முறையில் தகனம் செய்ய முடியாமல் டெல்லி அரசு மிகவும் திணறி வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அடங்காமல் பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கும் நிலையில் தலைநகர் டெல்லியின் நிலை மிகவும் பரிதாபமாக இருக்கிறது.
கொரோனா தொற்றுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க டெல்லி மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை.

உயிரிழப்பு அதிகரிப்பு
அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுவதால் தினமும் ஏராளமான நோயளிகள் உயிரிழந்து வருகின்றனர். இப்படி பரிதாபமாக உயிரிழப்பவர்களை கூட நல்ல முறையில் அடக்கம், தகனம் செய்ய முடியாமல் டெல்லி அரசு மிகவும் திணறி வருகிறது. தினமும் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் உடல்களை புதைக்க இடமில்லை.

350-க்கும் மேற்பட்ட இறப்புகள்
கடந்த சில வாரங்களாக டெல்லியில் தினசரி 350-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகின்றன. டெல்லியில் கடந்த திங்கள்கிழமை அன்று 350 இறப்புகள் பதிவாகியுள்ளன, ஞாயிற்றுக்கிழமை 357 இறப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு முந்தைய நாள் சனிக்கிழமை உயிரிழப்பு 348 ஆக இருந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தினமும் சாராரியாக 300 உயிரிழப்புகளை டெல்லி சந்தித்து வருகிறது.

தகன மேடை இல்லை
டெல்லியில் இறந்தவர்களை தகனம் செய்வதற்கான இட வசதிகள் குறைவாகவும் உள்ளன. அதாவது சாராய் காலே கான் என்ற தகனம் செய்யும் இடத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஒவ்வொரு நாளும் சுமார் 60-70 உடல்கள் கையாளப்படுகின்றன. ஆனால் இந்த இடம் ஒரே நேரத்தில் 22 உடல்களை மட்டுமே கையாளும் திறன் கொண்டது. இதனால் அந்த பகுதியில் குறைந்த பட்சம் 100 புதிய தகன மேடைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இடங்களை தேடி அலைகிறது
இந்த தகன மேடைகளும் பத்தாது என்பதால் புதிய இடங்களை தேடி அலையும் நிலைக்கு டெல்லி அரசு தள்ளப்பட்டுள்ளது. டெல்லியில் 25 தகன மேடைகள் உள்ளன. தகன மேடைகள் எப்போதும் பிசியாக இருப்பதால் அங்கு அதிகளவு பணியாளர்கள் 24 மணி நேரமும் வேலை செய்து வருகின்றனர். இறப்புகள் அதிகரித்து வந்ததால் உடல்களை தகனம் செய்ய பெங்களுருவில் அரசு நிலங்களை அடையாளம் காணும்படி சில நாட்களுக்கு முன்பு கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.அசோகா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications