திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ஆண்டுக்கு 2 முறை மட்டுமே தொழுகை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
டெல்லி: திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் ரம்ஜான் மற்றும் பக்ரீத் பண்டிகை என ஆண்டுக்கு இருமுறை மட்டுமே தொழுகை நடத்த அனுமதி அளிக்க முடியும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. மேலும் விலங்குகளை பலியிட அனுமதிக்க முடியாது என்ற உத்தரவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள மலையில் நெல்லித்தோப்பு பகுதியில் தொழுகை நடத்த தடை விதிக்கக் கோரி இந்து மக்கள் கட்சியின் அகில பாரத அனுமன் சேனை நிர்வாகி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இதேபோல், திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என அழைக்கவும், மலையில் ஆடு, கோழி பலியிட தடை விதிக்கவும் கோரி இந்து மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் பரமசிவம் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுக்களை ஒன்றாக விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, திருப்பரங்குன்றம் மலையில் ஆடு, கோழியை பலியிடுவது, சமைப்பது, அசைவ உணவை எடுத்துச் செல்வது ஆகியவற்றுக்கு தடை விதித்து கடந்த அக்டோபர் 10ஆம் தேதி தீர்ப்பளித்தது.
விலங்குகளை பலியிடுவது இந்திய அரசின் பண்டைய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தலங்களின் விதிகளை மீறுவதாக கூறப்பட்டு இருந்தது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கிய நீலையில், மூன்றாவது நீதிபதி விஜயகுமார் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து இமாம் ஹுசைன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதி செய்து, மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
சென்னை உயர் நீதிமன்றம் சமநிலையான ஒரு உத்தரவை கொடுத்து இருப்பதாகவும், ரம்ஜான் மற்றும் பக்ரீத் ஆகிய இரண்டு நாட்களில் மட்டுமே தொழுகை நடத்த அனுமதி அளிக்க முடியும், விலங்குகளை பலியிட அனுமதிக்க முடியாது என்ற உத்தரவினை உறுதி செய்துள்ளது. சிக்கந்தர் தர்காவில் வருடத்திற்கு 2 முறைதான் நமாஸ் செய்யனும், விலங்குகளை பலி கொடுக்க கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications