தந்தை பெரியார், விபி சிங்.. பாரத ரத்னா விருது அறிவிக்கனும்.. லோக்சபாவை அதிர வைத்த திருமாவளவன்!
டெல்லி: தந்தை பெரியார், முன்னாள் பிரதமர் விபி சிங் மற்றும் பகுஜன் சமாஜ் நிறுவனர் கன்சிராம் ஆகியோருக்கும் நாட்டின் உயரிய பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என லோக்சபாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
லோக்சபாவில் திருமாவளவன் நேற்று பேசியதாவது: ஜிஎஸ்டி வரி விதிப்பை முழுமையாக திரும்ப பெற வேண்டும். நிதி பகிர்வில் நீதியை நிலை நாட்ட வேண்டும்.

ஜிஎஸ்டி வாபஸ் பெறுக: ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் மூலம் பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மாநில அரசுகள் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஜிஎஸ்டி வரி இழப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வரி இழப்பை ஈடு செய்வதற்கு இழப்பீடு தருவதாக சொல்லி அது 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. மேலும் கூடுதலாக செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் போன்ற வரி விதிப்பை விதித்து அதன் மூலம் மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, இந்திய ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு மாநில அரசுகளோடு கலந்து பேசி மாற்று வகையிலான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் இன்று நான் இங்கே மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நிதிப் பகிர்வு: நிதிப் பகிர்வு குறித்து நிதிக் குழு பரிந்துரை செய்து வருகிறது. 14வது நிதிக்குழு மாநில அரசுகளுக்கு 42 சதவீதம் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறியது. 15வது நிதிக் குழு மாநில அரசுகளுக்கு 41% மொத்த வரி வருவாயில் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கிறது . ஆனால் மொத்த வரி வருவாயில் இன்று indivisible taxes என்கிற அந்த வரியை இந்திய ஒன்றிய அரசு முழுமையாக எடுத்துக் கொண்டு எஞ்சிய வரி வருவாயில் 35 சதவீதம் 14வது நிதிக் குழு, 30 சதவீதம் 15வது நிதிக் குழு என்கிற அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்து அளித்து இருப்பது மிகப்பெரிய மோசடியாகும் ஓரவஞ்சனையாகும்.
16-வது நிதிக் குழு: எனவே, இந்த 16வது நிதிக் குழுவில் நீதியை நிலைநாட்டக் கூடிய வகையிலே மாநில அரசுகளுக்கு நேர்மையான முறையில் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும். குறிப்பாக, மாநில அரசுகள் தங்களுடைய தற்சார்பை இழந்திருக்கக் கூடிய நிலையில் 75 விழுக்காடு அந்த வரி வருவாயில் அவர்களுக்கு நிதியை பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்ற வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.
வாக்குப் பதிவு இயந்திரங்களில் ஒப்புகை சீட்டு: வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டு 100% இணைக்கப்பட வேண்டும். அதனை எண்ணி முடித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமானதாகும். அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோளாக விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
வடக்கும் தெற்கும்: ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே மதம் என்கிற கொள்கைகளை முழங்கி இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் இந்திய இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் நாட்டை பிளவுபடுத்துவதாக குற்றம் சுமத்துவது எந்த வகையிலும் ஏற்புடையது இல்லை. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார் "வடக்கு தெற்கு என்கிற பாகுபாடு வளர்கிறது".
ராஜாஜி என்ற ராஜகோபாலாச்சாரியார் அவர்களே இந்த கவலையை பதிவு செய்திருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு நிலை ஏற்பட்டு விடக்கூடாது என்று அன்றைக்கு புரட்சியாளர் அம்பேத்கர் தமது கவலையை பதிவு செய்திருக்கிறார்.அந்த நிலையை உருவாக்கக்கூடிய வகையில் இன்றைக்கு செயல்பட்டு வருவது இந்திய ஒன்றிய அரசு தான் என்று நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன்.
பெரியார், விபி சிங்குக்கு பாரத ரத்னா: கடைசியாக ஒரே ஒரு வேண்டுகோள் தாக்கூர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கியதை நான் வரவேற்கிறேன் பாராட்டுகிறேன். அதேபோல சமூகநீதி காவலராக தமது வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட விபி சிங் அவர்களுக்கும் தந்தை பெரியார் அவர்களுக்கும் கான்சிராம் அவர்களுக்கும் பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று நான் கேட்டு இந்த வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கிறேன். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.












Click it and Unblock the Notifications