"சர்வாதிகார நாடுகளிடம் இருந்து அச்சுறுத்தல்.. இந்தியா சிறந்த நட்பு நாடு!" சொல்கிறார் போரிஸ் ஜான்சன்
டெல்லி: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வரும் ஏப்ரல் 21 இந்தியா வருகை தர உள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சமீபத்தில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகருக்குச் சென்று திரும்பி இருந்தார். உக்ரைனில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நேரடியாக அங்கு போரிஸ் ஜான்சன் சென்றது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.
உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தலைவர் ஒருவர் உக்ரைன் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு அவர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தியா பயணம்
இந்தச் சூழலில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும் ஏப்ரல் 21-22 ஆகிய தேதிகளில் இந்தியா வருகை தரவுள்ளார். போரிஸ் ஜான்சனின் இந்த பயணத்தில் இரு தரப்பிற்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் போரிஸ் ஜான்சன் இந்தியப் பிரதமர் மோடியைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போரிஸ் ஜான்சன்
இந்நிலையில், தனது இந்தியப் பயணம் குறித்து போரிஸ் ஜான்சன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். தனது இந்தியா பயணத்தில் இரு நாடுகளும் உண்மையில் முக்கியமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தும் என்று கூறினார். இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால கூட்டாண்மையை ஆழப்படுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வாதிகார நாடுகள்
இது குறித்து போரிஸ் ஜன்சன் தனது ட்விட்டரில், "நமது நாடுகளுக்கு இடையேயான நீண்டகால கூட்டாண்மையை ஆழப்படுத்த இந்த வாரம் நான் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறேன். சில சர்வாதிகார நாடுகளிடமிருந்து அச்சுறுத்தல்களை நாம் எதிர்கொள்ளும்போது, ஜனநாயக நாடுகளும் நண்பர்களும் ஒன்றிணைவது இன்றியமையாதது. இந்தியா, ஒரு பெரிய பொருளாதார சக்தியாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும், இந்த நிச்சயமற்ற காலங்களில் இங்கிலாந்துக்கு மிகவும் மதிப்புமிக்க நட்பு நாடாகவே உள்ளது.

பிரிட்டன் பிரதமர் போரிஸ்
இரு நாட்டு மக்களுக்கு எது முக்கியமோ அது தொடர்பாக இந்த பயணத்தில் ஆலோசனை நடத்தப்படும். வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட உள்ளது" என்று அவர் பதிவிட்டுள்ளார். இந்தியா- பிரிட்டன் இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பேச்சுவார்த்தைகளில் 26 அத்தியாயங்களில் உள்ள நிலையில், போரிஸ் ஜான்சன் இந்தப் பயணம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த தடையற்ற வர்த்தகம் தொடர்பான ஒப்பந்தம் இந்த ஆண்டு இறுதிக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக ஒப்பந்தம்
முதல் இரண்டு சுற்றுப் பேச்சுவார்த்தை முடிவில் இந்த ஒப்பந்தத்தின் 22 அத்தியாயங்களில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அடுத்து மூன்றாவது சுற்றுப் பேச்சுவார்த்தை இந்த மாத இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், போரிஸ் ஜான்சன் இந்தப் பயணத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய தொழிலதிபர்களைச் சந்திக்க உள்ளார். போரிஸ் ஜான்சன் இந்தப் பயணத் திட்டம் குறித்து இரு நாடுகளும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications