எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இப்போது லோக்சபா தேர்தலில் வென்ற எம்பிக்கள் பதவியேற்று வருகிறார்கள். இன்றைய தினம் தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்ற நிலையில், அவர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இருப்பினும், தமிழக எம்பிக்களில் சிலர் மட்டும் எந்தவொரு முழுக்கதையும் எழுப்பாமல் பதவிப் பிரமாண வாசங்களை மட்டும் வாசித்துப் பதவியேற்றார்கள்.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து என்டிஏ கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை அமைத்தது. மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.

இந்தச் சூழலில் நாடாளுமன்றம் முதல்முறையாக இப்போது கூடியது. லோக்சபா தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர். இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்றனர்.
கோஷம்: வழக்கமாக இதுபோல எம்பிக்கள் பதவியேற்கும் போது உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள். புதிதாகத் தேர்வாகி உள்ள எம்பிக்கள் ஆங்கிலம் அல்லது அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில் உறுதிமொழி எடுக்கலாம். வழக்கமாக இதுபோல உறுதி மொழி எடுக்கும் போது எம்பிக்கள் கோஷங்களை எழுப்புவது வழக்கம். அதுபோல இன்றும் எம்பிக்கள் பதவியேற்கும் போது பலரும் கோஷங்களை எழுப்பினர்.
உறுதி மொழி ஏற்கும் போது பதவிப் பிரமாண வாசகங்களைத் தவிர எம்பிக்கள் எழுப்பும் முழக்கங்கள் சபைக் குறிப்பில் இடம் பெறாது எனத் தற்காலிக சபாநாயகர் அறிவித்துவிட்டார். இருப்பினும் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பி வந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் பலரும் தமிழ்நாடு வாழ்க, தமிழ் வாழ்க உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். தென் சென்னை எம்பி தமிழச்சி தங்க பாண்டியன், "ஸ்டாலின் வாழ்க" என்று முழக்கமிட்டார்.
முழக்கம் இல்லை: மறுபுறம் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் உதயநிதி வாழ்க என்றும் கூறி முழக்கமிட்டனர். அதேநேரம் மூன்று மூத்த திமுக எம்பிக்கள் மட்டும் எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்றனர். டிஆர் பாலு மற்றும் ஆ ராசா ஆகிய மூத்த உறுப்பினர்கள் பதவியேற்கும் போது எந்தவொரு முழக்கத்தையும் எழுப்பவில்லை. அதேபோல தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழியும் பதவியேற்கும் போது எந்தவொரு முழக்கத்தையும் எழுப்பவில்லை.
இந்த மூன்று திமுக எம்பிக்கள் மட்டுமே பதவியேற்கும் போது எந்தவொரு முழுக்கதை எழுப்பவில்லை. அதேபோல இந்த மூன்று பேரும் மூத்த எம்பிக்கள் என்பதால் தற்காலிக சபாநாயகர் எழுந்து நின்று அவர்களுக்கு கை கொடுத்தார்.
ஸ்டாலின் படம்: அதேபோல தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனும் எந்த முழக்கமும் எழுப்பவில்லை.. இருப்பினும், அவர் தனது சட்ட பையில் இருந்த முதல்வர் ஸ்டாலின் படத்தைச் சபையில் எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது. மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம், நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் ஆகியோரும் எந்தவொரு முழக்கமும் இடாமல் பதவியேற்பு வாசங்களை மட்டுமே வாசித்தனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு உள்ள அனைத்து இடங்களிலும் திமுக கூட்டணியே வென்றது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக தேனி தவிர 38 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை தேனியிலும் திமுகவே வென்றது. புதுச்சேரியைச் சேர்ந்த 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வென்றது.












Click it and Unblock the Notifications