தெருநாய்கள் விவகாரம்.. என்ன நடவடிக்கை? உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல்
டெல்லி: தெருநாய்கள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. தெருநாய் கடிக்காமல், ரேபிஸ் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க அனைத்து மாநிலங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இதையடுத்து, தெருநாய் பிரச்சனையில் தமிழ்நாடு அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுவதும் தெருநாய்கள் அதிகரித்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய சூழலில், அந்த பிரச்சனையை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. தெருநாய்களின் தாக்குதல்கள், ரேபிஸ் நோயால் உயிரிழப்புகள் போன்றவை அதிகரித்து வருவதை நீதிமன்றம் பலமுறை குறிப்பிட்டும், மாநில அரசுகள் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்ற அதிருப்தியும் தெரிவித்தது.

இந்த வழக்கு கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, இதுவரை பதில் மனு தாக்கல் செய்யாத தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களுக்கு எதிராக நீதிமன்றம் கடுமையான நிலைப்பாட்டை எடுத்தது. நீதிபதி விக்ரம் நாத் சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு, இந்த விவகாரத்தில் மாநிலங்களின் அலட்சியம் நீதிமன்றத்தை அதிருப்தியடையச் செய்துள்ளதாக தெரிவித்தது.
குறிப்பாக, இந்த அளவிற்கு பெரிய சமூக பிரச்சனைக்கும், நாடாளுமன்றத்தில் விலங்கு நலன் தொடர்பான விதிமுறைகள் முன்னரே இயற்றப்பட்டிருந்த போதும், அவை நடைமுறைப்படுத்தப்படாமல் கிடப்பது குறித்து நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். எனவே பதில் மனு தாக்கல் செய்ய தவறிய மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், நவம்பர் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இதற்கிடையில், மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாநில தலைமைச் செயலர்கள் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், காணொலி வழியே ஆஜராக அனுமதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். "நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காத நிலையில், காணொளிக் காட்சி வழியாக ஆஜராக அனுமதிக்க முடியாது. நேரில் வர வேண்டும்" என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு தமது நடவடிக்கைகளை விளக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தில் ஒரு விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது. அதில், தெருநாய்களுக்கு கருத்தடை செய்ய 138 கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், கருத்தடை திட்டத்தை திறம்பட மேற்கொள்ள 450 கால்நடை மருத்துவர்களுக்கு 15 நாள் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது என்றும், இதுவரை 4.77 லட்சம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications