வியூகம் வகுக்கும் காங்கிரஸ்.. டெல்லியில் மாநில பொறுப்பாளர்களுடன் ஆலோசனை தொடங்கியது
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று காலை 11.40 மணியளவில் கூட்டம் தொடங்கி ஆலோசனை நடந்து வருகிறது.
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே எஞ்சியுள்ளன. வரும் ஏப்ரல் - மே மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து இந்தியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன. நாடு முழுவதும் ஒருங்கிணைந்து போட்டியிட இந்தியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் ஐந்து மாநில தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவால் சற்று ஏமாற்றம் அடைந்தது.

இதனால், தேர்தலுக்கு கட்சியை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை தீவிரமாக இறங்கியிருக்கிறது. அந்த வகையில் இன்று காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டத்திற்கு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி இன்று காலை 11.40 மணியளவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் மாநில வாரியாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூகம் குறித்து ஆலோசனை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், ராகுல் காந்தி மேற்கொள்ளும் பாரத் நியாய யாத்ரா குறித்தும் ஆலோசனை செய்யப்பட உள்ளது. ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை பாத யாத்திரை மேற்கொள்கிறார். ஜனவரி 14 ஆம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை மார்ச் 20 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
ஏற்கனவே ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரையை மேற்கொண்டார். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரை ஜனவரி 30, 2023 ஆம் ஆண்டு நிறைவு பெற்றது. இந்த நிலையில் தான் இந்தியாவின் கிழக்கு பகுதியில் இருந்து மேற்கு பகுதி வரை ராகுல் காந்தி மீண்டும் பாத யாத்திரை செல்கிறார். லோக்சபா தேர்தலுக்குள் கட்சியை வலுப்படுத்தும் விதமாக ராகுல் காந்தியின் யாத்திரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications