Lunar Eclipse 2025: ”ரத்த நிலா” வானத்தில் இரவு முழுக்க நடந்த மேஜிக்.. வாவ் போட வைத்த சந்திர கிரகணம்
டெல்லி: இந்தியாவில் 2022ஆம் ஆண்டுக்குப் பிறகு நிகழும் மிக நீண்ட முழுச் சந்திர கிரகணம் (Lunar Eclipse 2025) நிகழத் தொடங்கி இருக்கிறது. 2018 ஜூலை 27ஆம் தேதிக்குப் பிறகு, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுச் சந்திர கிரகணத்தைக் காண முடிவது இதுவே முதல் முறையாகும்.
இந்தப் பிரபஞ்சம் பல வானியல் அதிசயங்களைக் கொண்டதாகும். இங்கு நிகழும் பல விஷயங்கள் நம்மை வியப்பின் உச்சத்திற்கே போய்விடும். இப்படிக் கூட நடக்குமா என நாம் யோசிக்கும் பல வினோத நிகழ்வுகள் கூட நடக்கும். அப்படித் தான் இன்றைய தினம் மிக நீண்ட முழுச் சந்திர கிரகணம் நிகழ்கிறது. கடந்த 2022க்கு பிறகு மிக நீண்ட ஒரு சந்திர கிரகணமாக இது இருக்கும்.

சந்திர கிரகணம்
இதுபோல அடுத்த முழு சந்திர கிரகணத்தைப் பார்க்க, நாம் 2028 டிசம்பர் 31 வரை காத்திருக்க வேண்டும் என்கிறார் புனேவில் உள்ள தேசிய வானொலி வானியற்பியல் மையத்தின் (National Centre for Radio Astrophysics) இணைப் பேராசிரியருமான திவ்யா ஓபரோய். கிரகணங்கள் அரிதானவை என்றும், ஒவ்வொரு பௌர்ணமி அல்லது அமாவாசையிலும் நிகழாது என்றும் ஓபரோய் விளக்கினார். சந்திரன் பூமியைச் சுற்றிவரும் பாதை, சூரியனைப் பூமி சுற்றி வரும் பாதையிலிருந்து சுமார் 5 டிகிரி சாய்ந்துள்ளது என்பதே இதற்குக் காரணமாகும்.
எப்போது தொடங்கும்
சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. அப்போது பூமியின் நிழல் சந்திரனின் மேற்பரப்பில் விழுகிறது. இன்றைய தினம் சந்திர கிரகணம் இரவு 8:58 மணிக்குத் தொடங்கும். சூரிய கிரகணங்களைப் போல இல்லாமல், முழுச் சந்திர கிரகணத்தைக் காணச் சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை. வெறும் கண்கள், டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்கள் இருந்தாலே போதும் சந்திர கிரகணத்தைப் பாதுகாப்பாகப் பார்த்துச் சரிக்கலாம்.
தற்போது பகுதி சந்திர கிரகணம் இரவு 9:57 மணிக்கு தொடங்கி இருக்கிறது. முழுக் கிரகணம் இரவு 11:01 மணிக்குத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "சந்திரன் இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை - மொத்தம் 82 நிமிடங்கள் - முழுமையாக மறைக்கப்படும். பகுதி கிரகணம் அதிகாலை 1:26 மணிக்கு முடிவடையும். கிரகணம் செப்டம்பர் 8ம் தேதி அதிகாலை 2:25 மணிக்கு நிறைவடையும்" என்றார்..
பாதிப்புகளை ஏற்படுத்துமா?
முன்பே குறிப்பிட்டது போலச் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வருவதே இந்தச் சந்திர கிரணமாகும். ஆனால், நமது நாட்டில் கிரகணங்கள் பல மூடநம்பிக்கைகளுடன் தொடர்புடையவை. நமது நாட்டில் கிரகணச் சமயங்களில் மக்கள் பொதுவாக உணவு, நீரை எடுத்துக் கொள்ள மாட்டார்கள். சில சமயங்களில், கர்ப்பிணிப் பெண்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் கூட கிரகணங்கள் தீங்கை ஏற்படுத்தும் எனச் சிலர் நம்புகிறார்கள்.
இருப்பினும், சந்திர கிரகணங்கள் வெறும் நிழல் நிகழ்வுகள் என்றும் இவை மனிதர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கோ எந்த ஆபத்தையும் விளைவிப்பதில்லை என்றே வல்லுநர்கள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications