"ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையற்றது.." மக்களவையில் கொந்தளித்த டி.ஆர் பாலு
டெல்லி: நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஆளுநர் அணுகுமுறை சரியானதாக இல்லை என்று சாடியுள்ள திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு, மத்திய அரசு ஆளுநரைத் திரும்பப் பெற வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு நீட் விலக்கு வேண்டும் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் உள்ள கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் இதில் அதே நிலைப்பாட்டை எடுத்துள்ளது.
திமுக தலைமையிலான ஆட்சி அமைந்ததும் தமிழ்நாட்டில் நீட் பாதிப்பு குறித்து ஆராய ஏகே ராஜன் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது.

நீட் மசோதா
இந்த குழு அளித்த பரிந்துரையை அடிப்படையாக வைத்து திமுக அரசு நீட் எதிர்ப்பு மசோதாவைத் தமிழக சட்டசபையில் கடந்த செப். 13ஆம் தேதி முழு மனதாக நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஆறு மாதங்கள் ஆகும் நிலையில், நீட் விலக்கு கோரி தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவைத் தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். நீட் மசோதா உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானதாக இருக்கிறது என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டிருந்தது.

டிஆர் பாலு பேச்சு
இந்நிலையில், இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு, "தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் சார்பிலும் வேதனையுடன் மிகுந்த ஏமாற்றம் தரும் விஷயத்தை நான் இங்குத் தெரிவிருக்க விரும்புகிறேன். இதில் ஆளுநர் அணுகுமுறை சரியானதாக இல்லை. நேற்று இது தொடர்பாக நான் நாடாளுமன்றத்திலும் பேசியிருந்தேன். நீட் விலக்கு மசோதா சுமார் 5 மாதங்களுக்கு அப்படியே வைக்கப்பட்டிருந்தது. ஆளுநர் இதைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பவில்லை

எப்படித் திருப்பி அனுப்பலாம்
இந்தச் சூழலில் இன்று ஆளுநர் நீட் விலக்கு மசோதாவை ஆளுநருக்குத் திருப்பி அனுப்பியுள்ளார். எதன் அடிப்படையில் அவர் இப்படிச் செய்யலாம். அரசியலமைப்பு சட்டம் 200 மற்றும் 201 ஆகியவை அடிப்படையில், ஆளுநர் அந்தச் சட்டத்தைக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி இருக்க வேண்டும் இருப்பினும், அவர் இதைச் செய்யாமல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இந்த மசோதா ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் நலனுக்கு எதிராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பாஜக ஆதரவுடன் மசோதா
ஆளுநரின் இந்தக் கருத்து நீட் விலக்கு மசோதாவுக்கு நேர்மாறாக உள்ளது. நீட் விலக்கு மசோதா தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எண்ணம். தமிழ்நாட்டில் நீட் விலக்கு கோரிய இந்த மசோதாவை பாஜக உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

ஆட்டுக்கு தாடி எதற்கு
எனவே, ஆளுநருக்கு இந்த மசோதாவைத் திருப்பி அனுப்ப எந்தவொரு அதிகாரமும் இல்லை. அண்ணா ஒரு முறை சொன்ன, ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையற்றது என்று குறிப்பிட்டார். இப்போது அதே தான் நடக்கிறது. ஆளுநர் எதற்காக அங்கே இருந்து கொண்டு மசோதாவைத் திருப்பி அனுப்புகிறார். தமிழக மக்களின் எண்ணத்தை ஆளுநர் நிராகரித்துள்ளார், இந்த ஆளுநரை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்று காட்டமாகப் பேசினார். அதன் பின்னர் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்பிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.












Click it and Unblock the Notifications