Beef மட்டுமில்லை.. நாட்டில் அசைவ உணவுக்கே தடை போடணும்.. மம்தா கட்சியின் சத்ருகன் சின்ஹா டிமாண்ட்
டெல்லி: நாடு முழுவதும் மாட்டிறைச்சி மட்டுமின்றி அசைவ உணவுகள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும் என்று மூத்த நடிகரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பியுமான சத்ருஹன் சின்ஹா நாடாளுமன்ற வளாகத்தில் நின்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
பிரபல நடிகரான சத்ருஹன் சின்ஹா முதலில் பாஜகவில் சேர்ந்து செயல்பட்டார். அதன்பிறகு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

தற்போது மேற்கு வங்க மாநிலம் அசன்சோல் சட்டசபை தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
தற்போது நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இதனால் சத்ருஹன் சின்ஹா இன்று நாடாளுமன்றம் சென்றார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அப்போது அவர் கூறியதாவது: நாட்டின் பல்வேறு இடங்களில் மாட்டிறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. என்னை பொறுத்தவரை நாட்டில் மாட்டிறைச்சி மட்டுமின்றி அசைவ உணவுகள் அனைத்தையும் பொதுவாகவே தடை செய்ய வேண்டும்.
ஆனாலும் சில இடங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது என்பது சட்டமாக உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் மாட்டிறைச்சி சாப்பிடுவது சட்டப்பூர்வமாக உள்ளது. ஆனால் வடஇந்தியாவில் அப்படியில்லை. அசைவ உணவு தடையை செயல்பாட்டுக்கு கொண்டு வருவது சாத்தியமில்லை. இருப்பினும் தடையை ஒரு சில இடங்களில் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் செயல்படுத்த வேண்டும்'' என்றார். இது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதையடுத்து அவரிடம் உத்தரகாண்ட்டில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டம் ( Uniform Civil Code) பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‛‛பொது சிவில் சட்டத்தில் விதிகளை வரையறுப்பதற்கு முன்பு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். இந்த விவகாரத்தில் அனைவரின் கருத்துகளையும் கேட்க வேண்டும். இதனை ஒரு தேர்தல் அல்லது வாக்கு வங்கி அரசியலுக்காக பயன்படுத்த கூடாது. கவனமாகவும், எச்சரிக்கையுடனும் கையாள வேண்டும்'' என்றார்.
உத்தரகாண்ட்டில் கடந்த ஜனவரி மாதம் 27 ம் தேதி முதல் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த பொது சிவில் சட்டத்தின் மூலம் அனைத்து பிரிவினரின் திருமணம் மற்றும் லிவ் இன் ஷிப் ரிலேஷன்ஷிப் பற்றி கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதேபோல் மகன், மகளுக்கு சரிக்கு சமமான சொத்து உரிமை என்பது வழங்கப்பட உள்ளது. அதேபோல் இந்த பொது சிவில் சட்டத்தின் கீழ் திருமணம், விவாகரத்து உள்ளிட்டவற்றை பதிவு செய்ய தனியாக உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனி இணையதளத்தை தொடங்கி உள்ளார்.
உத்தரகாண்டை தொடர்ந்து குஜராத்தில் பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர தேவையான குழு அமைக்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் ஒரு தரப்பினர் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வரும் சூழலில் இன்னொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் சத்ருஹன் சின்ஹா இந்த கருத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications