தூத்துக்குடி துறைமுக ஆறு வழி சாலை திட்டம்.. சூப்பர் அப்டேட் கொடுத்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
டெல்லி: தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் ஆறுவழிச்சாலை அமைத்திட மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும், துறைமுகத்தை ஒட்டி பொருட்கள் கொண்டு செல்வதற்கான போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆறு வழிசாலை அமைக்கப்படுகிறது என்றும் மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்துள்ளார்.
தமிழ்நாட்டின் தென் மாவட்டமான தூத்துக்குடியில் உள்ள துறைமுகம் நாட்டில் மிகப்பழைமையான துறைமுகங்களில் ஒன்றாகும்.
கடல்வழி போக்குவரத்திற்கு முக்கிய இடமாக உள்ள இந்த துறைமுகத்தில் இருந்து ஏராளமான வெளிநாடுகளுக்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகிறது. அதேபோல், அங்கிருந்து வரும் சரக்குகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி துறைமுகம்
இந்த சரக்குகளை கொண்டு செல்லவும் இறக்கி எடுத்து வரவும் கனரக வாகனங்கள் துறைமுக சாலையில் அணிவகுத்து செல்கின்றன. இதனால், தூத்துக்குடி துறைமுகத்திற்கான போக்குவரத்தை மேம்படுத்தவும் நெரிசலை குறைக்கவும் அப்பகுதியில் ஆறு வழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது.

ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு
தூத்துக்குடி துறைமுக சாலையில் ஏராளமான ஷிப்பிங் நிறுவனங்கள், சரக்குகளை தேக்கி வைக்கும் குடோன்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் உப்பளங்கள் போன்றவை அமைந்துள்ளதால் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. 24 மணி நேரமும் பரபரப்பாக இந்த சாலை காணப்படுகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் ஆறுவழிச்சாலை அமைத்திட மத்திய அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

ஆறு வழிசாலை மேம்பட்டிற்காக
மொத்தம் 5.16 கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த 6 வழிச் சாலை அமைக்கப்பட இருப்பதாகவும் மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆறுவழிச்சாலை அமைக்கப்பட உள்ளதாக நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இது தொடர்பாக நிதின் கட்காரி கூறும் போது, தேசிய நெடுஞ்சாலையின் 7 ஏ- அதனுடைய பிரிவாக வரும் தேசிய நெடுஞ்சாலை 138 துறைமுக ஆறு வழிசாலை மேம்பட்டிற்காக சுமார் ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது.

போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில்
சுமார் 6 கி.மீட்டர் வரைக்கும் இந்த திட்டத்தின் வாயிலாக இந்த ஆறுவழிச்சாலை அமைக்கப்படுகிறது. துறைமுகத்தை ஒட்டி பொருட்கள் கொண்டு செல்வதற்கான போக்குவரத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆறு வழிசாலை அமைக்கப்படுகிறது' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஜம்மு காஷ்மீர் உள்பட பல்வேறு மாநிலங்களில் சாலைதிட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களையும் நிதின் கட்காரி பகிர்ந்துள்ளார்.

விரைவில் துவங்கும்
இந்த 6 வழிச்சாலை அமைக்கப்பட்டால் போக்குவரத்து மேம்படுவதோடு வர்த்தகம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது. இந்த ஆறு வழிச்சாலையை அமைத்திட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது அதனை மத்திய அரசு செயல்படுத்த தொடங்கி உள்ளது. இந்த ஆறுவழிச்சாலைக்கான பணிகள் விரைவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications