விஜய்க்கு தலைமை பண்பு இல்லை என்பதா? உடனே அந்த கருத்தை நீக்குங்க.. உச்ச நீதிமன்றம் கதவை தட்டிய தவெக
டெல்லி: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி செந்தில்குமார், 'விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை. பலியானவர்களை பார்க்காமல் தப்பி ஓடியுள்ளார்' என்று கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில், விஜய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கருத்துக்களை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மற்ற மனுக்களுடம் நாளை விசாரணைக்கு வருகிறது.
தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் 27ஆம் தேதி கரூரில் பிரசாரம் மேற்கொண்டார். கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியாகினர்.

கரூர் கூட்ட நெரிசல்
நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு விசாரணை குழு தனது விசாரணையை தொடங்கியுள்ளது. அதேபோல, தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் ஒன்றை அமைத்துள்ளது.
விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை
மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சென்னை உயர் நீதிமன்றத்தில் கரூர் விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசியல் கட்சிகள் நடத்தும் 'ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை 'ரோடு ஷோ' நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என்று உத்தரவிட வேண்டும் என சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார், தவெக மற்றும் விஜயை கடுமையாக விமர்சித்திருந்தார். நீதிபதி கூறுகையில், "விஜய்க்கு தலைமை பண்பு இல்லை. கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. வழக்கில் இருவர் மட்டுமே கைதாகியுள்ளனர். பலியானவர்களை பார்க்காமல் ஓடிய விஜய்க்கு தலைமைப்பண்பு இல்லை" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
உச்ச நீதிமன்றத்தில் தவெக மனு
இந்த நிலையில், விஜய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்த கடுமையான கருத்துக்களை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில், கரூர் உயிரிழப்பு சம்பவத்திற்கு வழிவகுத்த காரணங்கள், சமூக விரோதிகளின் தொடர்பு குறித்து உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாளை விசாரணைக்கு வருகிறது
"சம்பவ இடத்தில் இருந்து விஜய் தப்பி ஓடியதாக உயர் நீதிமன்ற நீதிபதி கூறியதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை தடியடி நடத்தியதால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு தவெக நிர்வாகிகளால் உதவ முடியவில்லை. பிரச்சனை ஏற்பட்டால் விஜய் வாகனத்தை திருப்பி அனுப்ப காவல்துறைக்கு அதிகாரம் இருந்தும், காவல்துறை அப்படி எதுவும் கூறவில்லை" என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தவெக தரப்பில் தாக்கல் செய்த இந்த மனுவை இன்றே விசாரணைக்கு எடுக்க தவெக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மற்ற மனுக்களோடு சேர்த்து நாளை விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications