"ஆதரவு தாருங்கள்.." பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி.. பரபர தகவல்
டெல்லி: உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளாகப் போர் தொடரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உடன் தொலைப்பேசி வழியாகப் பேசினார்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. முதலில் வான்வழித் தாக்குதலையும் அதைத் தொடர்ந்து பீரங்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மூலமும் ரஷ்யா தனது தாக்குதலை நடத்தியது.
போர் இன்று 3ஆவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. இதுவரை மட்டும் சுமார் 75க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை வெற்றிகரமாக அழித்ததுள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர்
உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் வேகமாகத் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறத் தொடங்கியது. உக்ரைன் தலைநகரைக் கைப்பற்றினால், கிட்டதட்ட மொத்த உக்ரைனும் தன் கட்டுப்பாட்டில் வந்ததைப் போல என்பதால், ரஷ்யா கீவ்வை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது. இரண்டாவது நாளான நேற்று தலைநகர் கீவ்வுக்கு வெளியே ரஷ்யா ராணுவம் தாக்குதலைத் தொடங்கியது. இருப்பினும், அங்குள்ள உக்ரைன் வீரர்கள் ரஷ்ய ராணுவத்தை எதிர்த்து துணிச்சலுடன் போராடி வருகின்றனர்.

உலக நாடுகள்
ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே அறிவித்தபடி, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்க ஒப்புதல் அளித்திருந்தது. உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், சீனா, சிரியா போன்ற சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்தியா இந்த விவகாரத்தில் நடுநிலை வகிப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஐநா தீர்மானம்
இதனிடையே ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தில் ரஷ்யாவுக்கு எதிராக 11 நாடுகள் வாக்களித்தது. அதேநேரம் இந்தியா, உள்பட 3 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்தன. பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக வாக்களித்த போதிலும், ரஷ்யா தன்னிடம் இருந்த வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த தீர்மானத்தை முறியடித்துள்ளது. ஐநா கவுன்சில் வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்ததை ரஷ்யா வரவேற்று இருந்தது.

பிரதமரிடம் பேச்சு
இதனிடையே உலக அரங்கில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் ஜெலன்ஸ்கி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன்படி இந்தியப் பிரதமர் மோடியிடம் இது தொடர்பாக இன்று அதிபர் ஜெலன்ஸ்கி தொலைப்பேசி வழியாகப் பேசியுள்ளார். ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேசினேன். உக்ரைன் மீது ரஷ்யா எடுத்து வரும் போர் நடவடிக்கை குறித்து விளக்கினேன்.

ஆதரவு தேவை
100,000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்கள் இப்போது எங்கள் நாட்டில் உள்ளனர். அவர்கள் குடியிருப்பு கட்டிடங்கள் மீது நயவஞ்சகமாகத் துப்பாக்கிச் சூடு நடத்துகிறார்கள். பாதுகாப்பு கவுன்சிலில் எங்களுக்கு அரசியல் ஆதரவை வழங்குமாறு இந்தியாவிடம் வலியுறுத்தப்பட்டது. ஆக்கிரமிப்பாளர் களர்களை உலக நாடுகள் ஒன்றாக இணைந்து நிறுத்த வேண்டும்" என்று அவர் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் தான், உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் மோடியிடம் ரஷ்ய அதிபர் புதின் பேசி இருந்த நிலையில், இப்போது உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அங்கிருக்கும் நிலைமையை விளக்கி உள்ளார்.

பிரதமர் மோடி வேதனை
இது தொடர்பாகப் பிரதமர் அலுவலகமும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், "உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்து அதிபர்
ஜெலென்ஸ்கி
பிரதமரிடம் விளக்கினார். இந்த போரினால் ஏற்படும் உயிரிழப்புக்குப் பிரதமர் தனது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தினார். வன்முறையை உடனடியாக நிறுத்தவும், பேச்சுவார்த்தைக்குத் திரும்பவும் வலியுறுத்தினார், மேலும் அமைதிக்கான முயற்சிகளுக்கு இந்தியாவின் பங்களிக்கும் எனக் குறிப்பிட்டார். மேலும், உக்ரைனில் உள்ள மாணவர்கள் உட்பட இந்தியர்கள் பாதுகாப்பு குறித்தும் பிரதமர் கவலை தெரிவித்தார். இந்தியர்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் வெளியேற்ற உதவும்படி கோரிக்கை விடுத்தார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications