நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. கெஜ்ரிவால் கைதுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் திருச்சி சிவா தாக்கு
டெல்லி: நாடு முழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலை உள்ளது. தோல்வி பயம் காரணமாக மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்து வருகிறது. மத்திய அரசை எதிர்த்து தொடர்ந்து ‛இந்தியா' கூட்டணி போராடும். அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் வெளியே வருவார் என ஸ்டாலின் எழுதி அனுப்பிய உரையை திருச்சி சிவா டெல்லி ஆர்பாட்டத்தில் வாசித்தார்.
டெல்லியில் புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதில் ஊழல் குற்றச்சாட்டு எழவே அந்த கொள்கை கைவிடப்பட்டது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் வழக்கு தொடர்பாக டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகக்கோரி சம்மன் அனுப்பியது. 9 சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கெஜ்ரிவால் கைது என்பது ஆம்ஆத்மிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கெஜ்ரிவால் கைதை எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர்.
மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து கட்சி செயல்பாட்டை முடக்குகிறது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் கைது என்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ‛இந்தியா' கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளனர்.
இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து டெல்லியில் இன்று "இந்தியா" கூட்டணி பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ், இடதுசாரித் தலைவர்கள் டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா பங்கேற்று உரையாற்றினார். அப்போது முதல்வர் ஸ்டாலின் உரையை அவர் திருச்சி சிவா வாசித்தார். திருச்சி சிவா பேசியதாவது: தோல்வி பயம் காரணமாக மத்திய அரசு எதிர்க்கட்சி தலைவர்களை அடுத்தடுத்து கைது செய்து வருகிறது. முதலில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்தது. இப்போது டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்கள் ‛இந்தியா' கூட்டணியின் முக்கிய தலைவர்கள். இந்த முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டாலும் கூட பாஜகவால் இந்த கூட்டணியை ஒன்றும் செய்ய முடியாது.
மோடி ஆட்சியில் இந்தியா முழுவதும் அறிவிக்கப்படாத அவசர நிலை அமலில் உள்ளது. கெஜ்ரிவாலின் பிரசாரம் மக்களை அதிக அளவில் கவரும் என்பதால் தான் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது பாஜக அரசு. எதிர்க்கட்சி தலைவர்களை முடக்குவதற்கு சிபிஐ, வருமானவரித்துறை, அமலாக்கத்துறையை மத்திய பாஜக அரசு தவறாக பயன்படுத்துகிறது. மத்திய பாஜக அரசை எதிர்த்து ‛இந்தியா' கூட்டணி தொடர்ந்து போராடும். அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் சிறையில் இருந்து வெளியே வருவார்'' என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை திருச்சி சிவா வாசித்தார்.
மேலும் அந்த கடிதத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க முடியாததையும் குறிப்பிட்டு இருந்தார். அதாவது தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ம் தேதி முதற்கட்டமாக அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் பணியின் காரணமாக பங்கேற்க முடியவில்லை. எனக்கு பதிலாக திருச்சி சிவா பங்கேற்றுள்ளார் என்பதையும் மேடையில் திருச்சி சிவா வாசித்து காண்பித்தார்.












Click it and Unblock the Notifications