Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லியில் ஒரே மாதத்தில் 800 பேர் மாயம்! யார் பொறுப்பு? சிசிடிவி நிறைந்த தலைநகரில் என்ன நடக்கிறது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் கடந்த மாதம் மட்டும் 800க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக வெளியான தகவல்களை அடுத்து, தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது.. இந்த விவகாரம் தொடர்பாக 2 வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய டெல்லி அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.. இதனால் தலைநகரில் பரபரப்பு மேலும் கூடியிருக்கிறது...

சமீப ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 25,000 பேர் வரை டெல்லியில் காணாமல் போனதாக டெல்லி காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன.. 2024ம் ஆண்டில் மட்டும் 24,893 நபர்கள் மாயமானதாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு முந்தைய 2023 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 25,088 ஆக இருந்ததாகவும் அதிகாரப்பூர்வ பதிவுகள் கூறுகின்றன..

Delhi Missing Persons

அதிர்ச்சியூட்டும் புள்ளிவிவரங்கள்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வேலை, கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக டெல்லிக்கு புலம்பெயரும் மக்கள் அதிகம் இருப்பதால், காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளில் சிக்கல்கள் ஏற்படுவதாக டெல்லி காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்..

குறிப்பாக, சிறார்கள் காணாமல் போனால் அவர்களை கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைப்பது மிகப் பெரிய சவாலாக மாறியுள்ளதாகவும் சொல்கிறார்கள்.

காவல்துறை எதிர்கொள்ளும் சவால்கள்

டெல்லி ஒரு பெருநகரமாக இருப்பதும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து மக்கள் பிழைப்புத் தேடி இங்கு புலம்பெயர்வதும் புலனாய்வில் பெரும் சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மாயமானவர்கள் குறித்த விவரங்களைத் தேடும்போது, அவர்களின் பூர்வீகம் மற்றும் பின்னணியைக் கண்டறிவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

மேலும், டெல்லியைச் சுற்றி உத்தரப்பிரதேசம், ஹரியானா போன்ற மாநிலங்களின் எல்லைகள் மிக அருகாமையில் அமைந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களும் சில மணிநேரப் பயணத் தொலைவிலேயே உள்ளன. குற்றவாளிகள் ஒருவரை கடத்தினாலோ அல்லது ஒரு நபர் தானாக வெளியேறினாலோ மிக எளிதாக அண்டை மாநிலங்களுக்குச் சென்றுவிட முடிகிறது. இது மனிதர்களை மட்டுமின்றி, திருடப்படும் வாகனங்களைக் கண்டுபிடிப்பதிலும் சவாலாக உள்ளது.

பெண்கள், குழந்தைகள்

எனினும், கடந்த பல ஆண்டுகளாக டெல்லியில் காணாமல் போனவர்களில் 60 சதவீதம் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது, மிகவும் அதிர்ச்சிகரமான விஷயமாக உள்ளது.

ஆண்டுதோறும் காணாமல் போனவர்களில் பாதியளவினரை கூட முழுமையாக கண்டுபிடிக்க முடியாத நிலை தொடர்வது அதைவிட வேதனையாக உள்ளது.. சிலர் தாங்களாகவே வீடுகளை விட்டு சென்றிருக்கலாம் என கருதப்பட்டாலும், சிறார்கள் தொடர்பான வழக்குகள் பெரும்பாலும் கடத்தலாகவே விசாரிக்கப்படுகின்றன..

இத்தனைக்கும் தலைநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.. அப்படியிருந்தும் இவர்கள் காணாமல் போயிருக்கிறார்கள்.. இது தொடர்பான வழக்குகளில் பாதிக்கு மேற்பட்டவை இன்னும் நிலுவையில் இருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது..

மனித உரிமைகள்

ஜனவரி மாதத்தின் முதல் 2 வாரங்களில் மட்டும் 807 பேர் மாயமானதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.. இதில் 191 பேர் சிறார்கள் என்றும், 616 பேர் பெரியவர்கள் என்றும் மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.. இவர்களில் இதுவரை 235 பேரை மட்டுமே காவல்துறை கண்டுபிடித்துள்ளதாகவும், எஞ்சிய 572 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது..

காணாமல் போகும் பெரியவர்களில் பலர் குடும்பப் பிரச்சனை அல்லது இதர காரணங்களால் சொந்த விருப்பத்தின் பேரில் வெளியேறியிருக்கலாம் என்று கருதப்பட்டாலும், சிறுவர்கள் மாயமாவதை காவல்துறையினர் 'கடத்தல்' என்ற கோணத்திலேயே அணுகுகின்றனர். சிறுவர்களைக் கண்டுபிடித்து மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைப்பது ஒரு பெரும் சவாலாகவே நீடிக்கிறது.

மனித உரிமை ஆணையம்

ஊடகச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இது குடிமக்களின் அடிப்படை உரிமைகளுக்கு விடப்பட்ட சவாலாகும் என்று மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. எனவே, காவல்துறையின் புலனாய்வுத் திறன் மற்றும் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துத் தெளிவான விளக்கம் தேவை என ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

டெல்லி மாநகர தலைமை செயலாளர் மற்றும் டெல்லி காவல் ஆணையருக்கு 2 வாரங்களுக்குள் இந்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது..

மாயமானவர்கள் எங்கே

மேலும், கடந்த பிப்ரவரி 5ல் வெளியான ஊடக அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் மட்டும் டெல்லியில் 24,508 பேர் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 60 சதவீதம் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.. இவர்களில் 15,421 பேரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ள நிலையில், 9,087 வழக்குகள் இன்னும் தீர்வு காணப்படாமல் உள்ளதாக மனித உரிமைகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது..

ஆகவே, அரசு மற்றும் காவல்துறையின் ஒருங்கிணைந்த நடவடிக்கை மட்டுமே இந்த மாயமாகும் சம்பவங்களைக் குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவும் வழிவகை செய்யும்.

அதுமட்டுமல்ல, ஒரு நகரத்தின் பாதுகாப்பு, அதன் மனிதர்களின் பாதுகாப்பில்தான் இருக்கிறது.. எண்ணிக்கைகள் அதிகரிக்கும் முன், தீர்வுகள் வேகமாக வர வேண்டிய நேரம் இது..!!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+