வாய்ச்சவடால்.. லோக்சபாவில் ‛குட்டிக்கதை’ சொன்ன பிரதமர் மோடி.. காங்கிரசுக்கு வந்ததே கோபம்! ஆஹா
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாடாளுமன்றத்தில் ஒரு புலியும், 2 நண்பர்களும் என்ற தலைப்பில் குட்டிக்கதை கூறி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடினார்.
டெல்லி: புலியும், 2 நண்பர்களும் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் குட்டிக்கதை கூறி காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மத்திய ஆட்சியை கடுமையாக அட்டாக் செய்தார். இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் சிரித்தபடி மேஜையில் கைகளை தட்டி வரவேற்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பிப்வரி 1ல் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். இதையடுத்து அடுத்தடுத்து அமர்வுகள் நடைபெற்றன. ஆனால் அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர்கள் தொடர்ந்து அமளி செய்தனர். இதனால் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து முடங்கி வந்தன. இந்நிலையில் தான் இன்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களின் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி ‛அட்டாக்’
இந்த உரையின்போது பிரதமர் நரேந்திர மோடி முந்தைய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் பதிலடி கொடுத்தார். மேலும் புலியை வேட்டையாட சென்ற 2 பேரின் கதையை கூறி முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார். இதுபற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மோசடி, வன்முறையின் அடையாளம்
கடந்த 2004 முதல் 2014 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி நடந்தது. காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்த கூட்டணி ஆட்சியில் ஒவ்வொரு வாய்ப்புகளும் நெருக்கடியான நிலையாக மாற்றியது தான் அந்த ஆட்சியின் அடையாளமாக உள்ளது. மோசடிகள் மற்றும் வன்முறைகளின் தசாப்தமாக அந்த ஆட்சி இருந்தது. நாட்டில் இருக்கும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனையை வெறும் சட்டத்தை காட்டியே சமாளித்தனர்.

கதை கூறிய பிரதமர்
முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மையை நீக்கியதாக கூறியதற்கு ஒரு கதையை கூறலாம். அதாவது ஒரு காட்டுக்குள் 2 பேர் புலியை வேட்டையாட செல்கிறார்கள். அவர்கள் எடுத்து சென்ற துப்பாக்கியை காரிலேயே வைத்துவிட்டு கீழே இறங்கி காட்டுக்குள் சென்றனர். இந்த வேளையில் திடீரென்று புலி வந்துவிட்டது. இதை பார்த்து அதிர்ந்தவர்கள் துப்பாக்கியை தேடினர். அப்போது தான் துப்பாக்கியை காரில் வைத்துவிட்டு வந்ததை புரிந்து கொண்டனர். இருப்பினும் தங்களின் பாதுகாப்புக்காக புலியிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கிகளின் லைசென்ஸை காண்பித்து தப்பித்ததாக கதை ஒன்று சொல்வார்கள்.

கதையை போன்றது தான் முந்தைய ஆட்சி
இந்த கதையை போன்றது தான் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வேலைவாய்ப்பின்மையை போக்கியது என்பது. வெறும் வாய்வார்த்தைகளாகவே வேலைவாய்ப்பு பிரச்சனையை நீக்கியதாக கூறினார்கள். ஆனால் அந்த ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யப்படவில்லை. வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படவில்லை. '' என பிரதமர் மோடி அட்டாக் செய்தார்.

ஆரவாரம் செய்த பாஜகவினர்
பிரதமர் நரேந்திர மோடியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணியில் இருந்த கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மாறாக மத்திய அமைச்சர், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிரித்தபடி பிரதமர் மோடியின் பேச்சுக்கு மேஜையை தட்டி ஆரவாரம் செய்து வரவேற்றனர்.












Click it and Unblock the Notifications