பெற்றோர்களே உஷார்.. பாலியல் வன்முறையில் சிக்கும் 14-17 வயது சிறுமிகள்.. யூனிசெஃப் அதிர்ச்சி தகவல்
டெல்லி: உலகம் முழுவதும் 18 வயதை அடைவதற்கு முன்னரே அதாவது 14 முதல் 17 வயதுக்கு உள்பட்ட கோடிக்கணக்கிலான சிறுமிகள், பெண்கள் பாலியல் வன்முறை, பாலியல் தொல்லைகள், தாக்குதல்களுக்கு உள்ளாவதாக யுனிசெஃப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்னைகள் அதிகளவில் அரங்கேறி வருகின்றன. சிறுமிகளிடம் இருந்து பெரிதாக எதிர்ப்பு வராது என்பதால் குழந்தைகளிடம் நம்பிக்கைக்குரிய நபர்களே அதிக அளவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், உலக அளவில் 18 வயதாகும் முன்னரே சுமார் 37 கோடிக்கும் மேற்பட்ட சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமை, வல்லுறவுக்கு உள்ளாவதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது. சர்வதேச பெண் குழந்தை தினத்தை முன்னிட்டு யூனிசெஃப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள புள்ளி விவரங்களின் படி, உலகம் முழுவதும் எட்டில் ஒரு பெண் 18 வயதுக்கு முன்னரே பாலியல் வன்கொடுமை பிரச்னைக்கு ஆளாவதாகவும், குழந்தைப் பருவத்தில் பாலியல் வன்முறைக்குள்ளாகும் சம்பவங்கள் டீனேஜ் வயதில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 14 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளே பாலியல் பிரச்னைகளில் அதிகமாக பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சிறு வயது பாலியல் வன்கொடுமை கலாசாரம், புவியியல், பொருளாதாரம் ஆகியவற்றை தாண்டியதாக உள்ளது. அரசியல், பாதுகாப்பு நெருக்கடி அல்லது போர் உள்ளிட்டவை இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு மிக்கிய காரணமாக அமைகின்றன.
அகதிகள் முகாம் மற்றும் பாதுகாப்பில்லாத அமைப்புகளில் நான்கு பெண்களில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆப்பிரிக்க நாடுகளில் அதிக எண்ணிக்கையாக 7.9 கோடி பெண்கள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் 7.5 கோடி பேரும், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் 6.8 கோடி பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வரிசையில், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 4.5 கோடி பேரும், வட ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆசியாவில் 2.9 கோடி பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். இதில் சிறுவர்களும் விதிவிலக்கல்ல. 24 முதல் 31 கோடி சிறுவர்கள் மற்றும் ஆண்கள் 11 பேரில் ஒருவர் குழந்தை பருவத்தில் பாலியல் வன்கொடுமை அல்லது வல்லுறவுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, வாய்மொழி பாலியல் தாக்குதல்களையும் யுனிசெஃப் ஆய்வு செய்துள்ளது. அதில், சிறுமிகள் மற்றும் பெண்கள் 65 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அதாவது, கிட்டத்தட்ட ஐந்து பேரில் ஒருவர் பாதிக்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என்பது நம்முடைய மனசாட்சி மீதான கறையாகும். இந்த சம்பவம் ஆழமான, அழிக்க முடியாத அதிர்ச்சியை குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு மிகவும் பழக்கப்பட்ட, நம்பத் தகுந்த நபர்களால் தான் இதுபோன்ற பாலியல் வன்கொடுமைகள் அளிக்கப்படுகின்றன என்று யுனிசெஃப் அதிகாரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications