வருமான வரி குறித்த 2 முக்கியமான அறிவிப்புகள்.. நிர்மலா சீதாராமன் உரையில் கவனிக்க வேண்டியவை
டெல்லி: இன்றைய தினம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் சில முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. வருமான வரி தொடர்பாக இதில் இடம்பெற்று இருந்த இரு முக்கியமான அறிவிப்புகள் குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியாவில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இன்று பிப்ரவரி 1ம் தேதி அவர் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

100% அபராதம்
வருமானத்தை மறைப்போருக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை மத்திய பட்ஜெட் உறுதி செய்கிறது. இனி வருமானத்தைக் குறைவாகக் காட்டுதல் அல்லது வேண்டும் என்றே வருமானத்தை மறைத்தால் 100% வரி அபராதம் விதிக்கப்படும். வேண்டும் என்றே வருமானத்தைக் குறைத்துக் காட்டுபவர்களைத் தடுக்க இது உதவும்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி தாக்கல் காலக்கெடுவில் மாற்றங்கள் குறித்த முன்மொழிவையும் வெளியிட்டார். அதில் அவர், "மறுபரிசீலனை செய்யப்பட்ட வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31க்கு பதில் மார்ச் 31 வரை தாக்கல் செய்யலாம். அதற்குக் குறிப்பிட்ட தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்..
வருமான வரி விலக்கு
மேலும், 2026 ஏப்ரல் 1 முதல் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் வழங்கும் விபத்து/மரணம் தொடர்பான இழப்பீட்டுத் தொகைக்கு வருமான வரி இல்லை. பாதிக்கப்பட்ட நபர் அல்லது குடும்பத்தினர் பெறும் இந்த முழுத் தொகையும், எந்தவித வரிப் பிடித்தமும் இல்லாமல் நேரடியாக அவர்களுக்குச் சென்று சேரும் என்பதும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படி உதவும்!
அதாவது மோட்டார் வாகன விபத்துகள் தீர்ப்பாயம் வழங்கும் இழப்பீட்டுத் தொகையின் மீதான வட்டிக்கு, இனி மூலத்தில் வரிப் பிடித்தம் (TDS) செய்யப்படாது என முன்மொழியப்பட்டுள்ளது. இது விபத்துகளால் பாதிக்கப்படும் தனிநபர்களுக்கு ஏற்படும் இன்னல்களைக் குறைத்து, உடனடி நிவாரணம் வழங்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.
முன்னதாக, சட்டம் பிரிவு 393(4) விதிகளின்கீழ், ஆண்டில் வட்டி வருமானம் ₹50,000ஐ தாண்டவில்லை என்றால் மட்டுமே மூலத்தில் வரி பிடித்தம் செய்யப்படாது என்ற விதிமுறை இருந்தது. இந்த திருத்தம் ₹50,000 வரம்பை நீக்கி, முழுமையான வரி விலக்கை உறுதி செய்கிறது. இது 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் விபத்தால் பாதிக்கப்பட்டோர் அல்லது அவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிதியுதவியில் எந்தவொரு பிடித்தமும் செய்யப்படாது.
இதர முக்கிய அறிவிப்புகள்
இந்த பட்ஜெட்டில் வேறு சில முக்கிய அறிவிப்புகளும் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக உலகின் எதிர்காலமாக அறியப்படும் செமிகண்டக்டர் துறையை ஊக்குவிக்க மத்திய அரசு ரூ.40,000 கோடியை ஒதுக்கியுள்ளது. இப்போது செமிகண்டக்டர் உற்பத்திக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்துமே சீனாவை நம்பி இருக்கும் சூழலில், அந்த நிலையை மாற்ற இது நிச்சயம் உதவும். அதில் மாற்றுக்கருத்து இல்லை!
அதேபோல 17 முக்கியமான மருந்துகளுக்கான இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரிய நோய்களுக்கு வெளிநாட்டு மருந்துகள் மூலம் சிகிச்சை பெறுவோர் மீதான சுமை குறைந்துள்ளது. இதுபோல மத்திய பட்ஜெட்டில் பல கவனிக்க வைக்கும் அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.












Click it and Unblock the Notifications