17 உயிர் காக்கும் மருந்துகளுக்கு ஜீரோ இறக்குமதி வரி.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
டெல்லி: மத்திய பட்ஜெட்டை இன்று நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், அதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக 17 வகை உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகளுக்கான சுங்க வரியை மொத்தமாக நீக்குவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் சிகிச்சை செலவுகள் பெருவாரியாகக் குறையும்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது.

இந்த பட்ஜெட்டில் நோயாளிகளின் சிகிச்சைச் செலவுகளைக் குறைக்கும் விதமாக, 17 வகை உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டு வந்த சுங்க வரியில் முழுமையான விலக்கு அளிக்கப்படுவதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் மூலம் அதிக விலை கொண்ட அத்தியாவசிய மருந்துகள் நாடு முழுவதும் உள்ள புற்றுநோயாளிகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும். இதன் மூலம் அவர்களால் எளிதாகக் குறைந்த செலவில் சிகிச்சை பெற முடியும்.
நமது நாட்டில் சில குறிப்பிட்ட வகை மருந்துகள் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்ய வேண்டி இருக்கிறது. இவை அனைத்தும் வெளிநாடுகளில் காப்புரிமை செய்யப்பட்டு இருக்கும். இதனால் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு நமது மருந்து நிறுவனங்களால் உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அந்தக் காலகட்டத்தில் சிகிச்சைக்கு நாம் வெளிநாடுகளில் இருந்தே மருந்துகளை இறக்குமதி செய்ய வேண்டி இருக்கும்.
இதில் மருந்துகளுக்கு அதிகச் சுங்க வரிகள் இருந்ததால் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் மிடில் கிளாஸ் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். மருந்துகளுக்கான சுங்க வரியை நீக்க வேண்டும் என்ற குரல்கள் தொடர்ந்து இருந்த நிலையில் தான், இந்த பட்ஜெட்டில் அது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு இருக்கிறது.
17 வகை உயிர்காக்கும் புற்றுநோய் மருந்துகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மருந்துப் பொருட்களுக்குச் சுங்க வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சைக்கான செலவுகள் பெருவாரியாகக் குறையும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications