மோடியின் புதிய அமைச்சரவை.. 12 தலித், 8 பழங்குடியினர், 27 ஒபிசி, 11 பெண்கள், 50 வயதுக்கு கீழ் 14 பேர்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்படும் நிலையில், அதில் 12 தலித்துகள், 27 ஒபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள், 11 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். மேலும் 50 வயதுக்குக் குறைவான 14 பேரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியைத் தக்க வைத்தபோது, 53 அமைச்சர்கள் மோடியின் 2.o அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர்.
இரண்டு ஆண்டுகளாக அமைச்சரவையில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தது. கொரோனா 2ஆம் அலையை பாஜக சரியாகச் சமாளிக்கவில்லை எனப் பலரும் விமர்சித்தனர்.

அமைச்சரவையில் மாற்றம்
இதையடுத்து, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என அப்போதே தகவல் வெளியானது. அமைச்சரவையில் மிகப் பெரியளவில் மாற்றங்கள் இருக்கும் என்றும் கூறப்பட்டது. அதன்படி சமூக நீதித் துறை அமைச்சராக இருந்த தாவர்சந்த் கெலாட் நேற்று கர்நாடகா ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேலும், இன்று மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், பாபுல் சுப்ரியோ உள்ளிட்ட 14 பேர் ராஜினாமா செய்தனர்.

43 பேர்
அதைத் தொடர்ந்து புதிதாக அமைச்சர்களாகப் பதவியேற்கும் 43 பேரின் பட்டியல் வெளியானது. அதில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல் முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இன்று அமைச்சர்களாகப் பதவியேற்கும் பெரும்பாலானோர் ஏற்கனவே மத்திய அரசில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். மேலும் 13 பேர் வக்கீல்கள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள், 7 குடிமைப் பணி அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தலித்துகள்
மேலும், இதில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா ஆகிய 8 மாநிலங்களின் 12 தலித்துகளுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் இரண்டு பேருக்கு கேபினேட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 மாநிலங்களின் 27 ஓபிசியினருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் ஐந்து பேருக்கு கேபினேட் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பழங்குடியினர்
குறிப்பாக புதிய அமைச்சரவையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அருணாச்சல பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஒடிசா, அசாம் ஆகிய 8 மாநிலங்களின் 8 பழங்குடியினருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பிராமணர், பனியா, லிங்காயத் உள்ளிட்ட முற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 29 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பெண்கள்
மேலும், மத்திய அமைச்சரவையில் மொத்தம் 11 பெண்கள் இடம் பெற்றுள்ளன. 50 வயதுக்குக் குறைவான 14 பேருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமியர் ஒருவர், கிறிஸ்துவர் ஒருவர், சீக்கிய மதத்தைச் சேர்ந்த ஒருவர் புத்த மதத்தைச் சேர்ந்த இரண்டு பேருக்கும் அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications