இலங்கை செல்கிறார் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்- சீனா உளவு கப்பலுக்கும் அனுமதி கொடுத்த ரணில்!
டெல்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் இறுதியில் இலங்கை செல்ல இருப்பதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. அதே நேரத்தில் நீர்வள ஆராய்ச்சி என்ற பெயரில் சீனா அனுப்பி இருக்கும் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அனுமதி கொடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையை எப்போதும் தமது பிடியில் இந்தியா வைத்திருந்து ஒரு காலம். ராஜீவ் காந்தி நாட்டின் பிரதமரான பின்னர் அத்தனையும் தலைகீழாகிப் போனது. இந்திய வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கும் இடத்தில் அதிகாரிகள் தங்களை நிலை நிறுத்தியதால் இலங்கையை இந்தியா தனது பிடியில் இருந்து நழுவ விட்டது. இதனால் இலங்கையில் எளிதாக சீனா உள்ளே நுழைந்து இந்தியாவுக்கு இன்று பேராபத்தாக நிற்கிறது.

சீனாவின் கடற்படை தளம்: இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தில் மிகப் பிரம்மாண்ட கடற்படை தளம் ஒன்றை சீனா அமைக்கப் போவதாக அண்மையில் அமெரிக்கா ஆய்வு நிறுவனம் எச்சரித்திருந்தது. இந்தியாவுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இலங்கை அம்பாந்தோட்டா துறைமுகம் அமையப் போகிறது என்பதும் அதன் எச்சரிக்கைகளில் ஒன்று.
சீனாவுக்கு முன்னுரிமை: என்னதான் இலங்கைக்கு பெருமளவு நிதி உதவி மத்திய அரசு வழங்கினாலும் இலங்கை அரசாங்கமானது சீனாவுக்கு தொடர்ந்து முன்னுரிமை கொடுத்தே வருகிறது. இது மத்திய அரசுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவுடன் பல்வேறு திட்டங்களுக்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் இலங்கை அரசு அதனை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை என்பதும் மற்றொரு அதிருப்தி.
திருகோணமலையில் ராஜ்நாத் சிங்: இந்தப் பின்னணியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த வாரம் இறுதியில் இலங்கை பயணம் மேற்கொள்கிறார். இலங்கைக்கு 2 நாட்கள் பயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா- இலங்கை இடையே எண்ணெய் குழாய் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார். அதேபோல இந்தியா- இலங்கை இடையேயான பாலம் அமைப்பது குறித்தும் விவாதிக்க இருக்கிறார். இலங்கை தமிழர்களின் தாயகப் பகுதியான திருகோணமலை மேம்பாட்டுக்காக அண்மையில் ரணில் விக்கிரமசிங்கேவின் இந்திய பயணத்தின் போது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நிலைமையையும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்ய இருக்கிறார்.

முப்படை தளபதிகளுடன் ஆலோசனை: மேலும் இலங்கை அமைச்சர் பிரமித்த பண்டார தென்னக்கோன், இலங்கை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் இலங்கையின் முப்படை தளபதிகளையும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
சீனா உளவு கப்பல்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை பயணம் மேற்கொள்ளும் நிலையில் சீனா ஷி யான் - 6 என்ற ஆய்வுக் கப்பலை இலங்கைக்கு அனுப்பி இருக்கிறது. இந்த ஆய்வுக் கப்பல், இலங்கையில் நுழைவதற்கு ஜனாதிபதி ரணில் ஒப்புதல் தந்துள்ளார். நீரியல் ஆய்வு என்ற பெயரில் பிரம்மாண்ட உளவு கப்பலை சீனா அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவை கண்காணிக்க இலங்கைக்கு ஏற்கனவே சீனா உளவு கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பி இருக்கிறது. தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பயணம் மேற்கொள்ளும் நிலையில், சீனாவின் உளவு கப்பலை உள்ளே நுழைய இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அனுமதி அளித்திருப்பது இந்தியாவுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications